×

கார்கில் வெற்றி தினம்: போரில் இறந்த வீரர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி அஞ்சலி!

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு போரில் இறந்த வீரர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினர். 1999ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1999ம் ஆண்டு யாரும் எதிர்பாராத நேரத்தில் ஜம்மு- காஷ்மீரின் கார்கில் பகுதியில் பயங்கரவாதிகளை போல பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்தது. சில பகுதிகளையும் கைப்பற்றியது. அப்போது இந்தியா ‘ஆபரேஷன் விஜய்’ நடவடிக்கையை கையில் எடுத்தது. மலைக்காடுகளுக்குள் புகுந்து இந்திய வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதல்களால் பாகிஸ்தான் ராணுவத்தினர் தலைதெறிக்க திரும்பி ஓடினர். இதில் இந்திய ராணுவம் மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது.

இந்நிலையில் கார்கில் போரில் இறந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி செலுத்தினர். இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது X தளத்தில் கூறியிருப்பதாவது: கார்கில் விஜய் தினத்தை முன்னிட்டு, தாய்நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த துணிச்சலான வீரர்களுக்கு நான் மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். இந்த நாள் நமது வீரர்களின் அசாதாரண வீரம், துணிச்சல் மற்றும் உறுதிப்பாட்டின் அடையாளமாகும். நாட்டிற்காக அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உயர்ந்த தியாகம் எப்போதும் நாட்டு மக்களை ஊக்குவிக்கும். ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தனது X தளத்தில் கூறியிருப்பதாவது: கார்கில் வெற்றி தினமான இன்று நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துக்கள். நாட்டின் சுயமரியாதையைப் பாதுகாக்க தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த இந்தியத் தாயின் துணிச்சலான மகன்களின் ஈடு இணையற்ற துணிச்சலையும் வீரத்தையும் இந்த சந்தர்ப்பம் நமக்கு நினைவூட்டுகிறது. தாய்நாட்டிற்காக இறக்க வேண்டும் என்ற அவர்களின் ஆர்வம் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். ஜெய் ஹிந்த்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post கார்கில் வெற்றி தினம்: போரில் இறந்த வீரர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி அஞ்சலி! appeared first on Dinakaran.

Tags : Kargil Victory Day ,President ,Draupadi Murmu ,Modi ,India ,1999 Kargil War ,Pakistan… ,Dinakaran ,
× RELATED ரூ.600 கோடிக்கு கூடுதல் வருமானம் ரயில்...