×

ரூ.600 கோடிக்கு கூடுதல் வருமானம் ரயில் கட்டணம் உயர்கிறது: 26ம் தேதி முதல் அமல், ஒரே ஆண்டில் இரு முறை உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி

சென்னை: வரும் 26ம் தேதி முதல் ஏசி மற்றும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. நடப்பு ஆண்டில் 2வது முறையாக அமல்படுத்தப்படும் கட்டண உயர்வு இது. இதன் மூலம் ஒன்றிய அரசுக்கு ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பான இந்திய ரயில்வே, கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாக திகழ்கிறது. பெரும்பாலான மக்கள், நீண்ட தூர வசதியான பயணத்துக்கு ரயில் பயணத்தையே சார்ந்துள்ளனர்.

ஆனால், ரயில் கட்டணங்கள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் கடந்த ஜூலை 1ம் தேதி மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் ஏசி வகுப்பு கட்டணத்தை ரயில்வே உயர்த்தியது. இதன்படி மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணம் கிலோ மீட்டருக்கு ஒரு காசு உயர்ந்தது. ஏசி வகுப்புகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 காசு அதிகரித்தது. இதைத் தொடர்ந்து 2வது முறையாக வரும் 26ம் தேதி ரயில் கட்டண உயர்வை ரயில்வே அமைச்சகம் அதிகரித்துள்ளது.

இதன்படி, சாதாரண வகுப்பு பெட்டியில் பயணிக்க 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்வோருக்கு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா கட்டணம் உயர்கிறது. மெயில், எக்ஸ்பிரஸ்களில் சாதாரண வகுப்புகளுக்கும், அனைத்து ரயில்களிலும் ஏசி வகுப்புகளுக்கும் கிலோ மீட்டருக்கு 2 காசு உயர்கிறது. இதன்படி 500 கிலோமீட்டர் பயணம் செய்யும் ஒருவர் ரூ.10 கூடுதலாக கொடுக்க வேண்டியிருக்கும்.

நடப்பு நிதியாண்டில் கடந்த ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்ட கட்டண உயர்வு மூலம் ரயில்வேக்கு கூடுதலாக சுமார் ரூ.700 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டது. தற்போதைய உயர்வால் ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புறநகர் ரயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்களுக்கு கட்டணம் மாற்றமில்லை. அதேபோல், 215 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்திற்கான பொது வகுப்பு டிக்கெட்களுக்கும் உயர்வு இல்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி போன்ற முக்கிய நகரங்களில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம் போன்ற இடங்களுக்கு செல்லும் நீண்ட தூர ரயில்களில் இந்த உயர்வு பொருந்தும். உதாரணமாக, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (சென்னை-மைசூரு, சென்னை-கோயம்புத்தூர்), சென்னை-நெல்லை, தூத்துக்குடி,கன்னியாகுமரி-மும்பை எக்ஸ்பிரஸ், திருக்குறள் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் பயணிப்பவர்கள் கூடுதல் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.

ஆனால், சென்னை-பாண்டிச்சேரி, சென்னை-விழுப்புரம், மதுரை-திருநெல்வேலி போன்ற குறுகிய அல்லது நடுத்தர தூர ரயில்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. வந்தே பாரத், அம்ரித் பாரத், தேஜஸ் போன்ற போன்ற அதிவேக ரயில்களை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் கட்டணங்கள் அதிகம். இந்நிலையில் புதிய கட்டண உயர்வு பயணிகளுக்கு புதிய சுமையாக மாறியுள்ளது.

புதிய ரயில்கள் அறிமுகம், சம்பள தொகை உயர்வு போன்றவற்றை ஈடுகட்ட இந்த கட்டண உயர்வை அடுத்தடுத்து ரயில்வே அமைச்சகம் அமல்படுத்தி வருவதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் அதிக மக்கள் ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு பரிசாக இந்த ரயில் கட்டண உயர்வை 2வது முறையாக ரயில்வே அறிவித்திருக்கிறதா என பயணிகளிடையே கேள்வி எழுந்துள்ளது.

மேலும், முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் புதிய கட்டணத்தை சரிபார்க்குமாறு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. ஒன்றிய அரசால் நிர்வகிக்கப்படும் பொதுப் போக்குவரத்தான ரயில்வே, சேவை மேம்பாடு, ஊழியர் சம்பளம் போன்றவற்றை காரணம் காட்டி கட்டணங்களை உயர்த்தி வருவது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

லாபநோக்கமின்றி மக்கள் சேவை மேம்பட செயல்பட வேண்டிய நிறுவனத்தை லாபத்தில் இயக்க ஒன்றிய பாஜ அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இது சாமானிய மக்களுக்கு தொடர்ந்து சுமையாக மாறி வருகிறது என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. நடப்பு ஆண்டில் மட்டும் 2 முறை கட்டண உயர்வால் ரயில்வேக்கு ரூ.1,300 கோடி கூடுதல் வருவாயாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* பாஜ ஆட்சியில் 2 மடங்கான ரயில் கட்டணம்
ஒன்றிய பாஜ அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ரயில் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்துள்ளது. 2014ம் ஆண்டு முதல்முறையாக ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைத்தபோது, அனைத்து ரயில்களிலும், அனைத்து வகுப்புகளிலும் டிக்கெட் கட்டணம் 14.2 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதுபோல், சரக்கு கட்டணங்கள் 6.5 சதவீதம் உயர்த்தப்பட்டன. 2014 ஜூன் 25ம் தேதி இது அமலுக்கு வந்தது.

அடுத்ததாக, 2016ம் ஆண்டு டைனமிக் கட்டண முறை அறிமுகம் செய்யப்ப்டடது. அதாவது, ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ போன்ற அதிவேக பிரீமியம் ரயில்களில் ஒவ்வொரு 10 சதவீத சீட் நிரம்பும் போதும் 10 சதவீதம் வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. பொதுவாக அடிப்படை கட்டணத்தை விட சுமார் 50 சதவீதம் அதிகமாக வசூலிக்கப்படும். பின்னர் 2020ல் ரயில் கட்டண சீரமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன்மூலம் 2020 ஜனவரி 1ம் தேதி, சாதாரண ரயில்களில் கிலோ மீட்டருக்கு ஒரு காசு, மெயில் எக்ஸ்பிரஸ் ஏசி அல்லாத பெட்டிகளில் கிலோ மீட்டருக்கு 2 காசு, ஏசி வகுப்புகளில் கிலோ மீட்டருக்கு 4 காசு உயர்த்தப்பட்டது. நடப்பு ஆண்டில் கடந்த ஜுலை 1ம் தேதி கட்டண உயர்வை அமல்படுத்தி, 5 மாதங்களிலேயே மீண்டும் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இவ்வாறு தொடர் நடவடிக்கையால் ரயில் கட்டணம் 2 மடங்கு அதிகரித்துள்ளதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Chennai ,EU government ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...