×

ஆக. 2ம் தேதி சென்னையில் நடக்கிறது வைகோவுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்: மல்லை சத்யாவின் திடீர் அறிவிப்பால் மதிமுகவில் பரபரப்பு

சென்னை: மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை அடுக்கி வருவதால் மதிமுகவில் சலசலப்பு நிலவி வருகிறது. கடந்த 10ம்தேதி வைகோ மற்றும் துரை வைகோ தலைமையில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் மல்லை சத்யா குறித்துப் பேசிய வைகோ, “எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த மல்லை சத்யா, தனக்கு துரோகி பட்டம் கொடுத்து வைகோ தன்னை வெளியேற்ற முயற்சிக்கிறார். குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் கட்டுகிறார். வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை துரோகி என சொல்லும் அளவுக்கு அவர் துணிந்துள்ளார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதை தொடர்ந்து, மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று மதிமுகவின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அவரது படங்களை கட்சி நிகழ்ச்சிகளில் பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிடப்பட்டது. இந்த சூழலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு எதிராக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உண்ணாவிரத போரட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்.

மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு, ஆகஸ்ட் 2ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல் துறையில் மல்லை சத்யா மனு அளித்துள்ளார். மனுவை ஏற்றுக்கொண்ட காவல்துறையும், காலை 10 மணி முதல் 5 மணி வரையில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளனர்.

32 ஆண்டுகால பொது வாழ்க்கையை கேள்வி குறியாக்கும் வகையில் `துரோகி’ என சொல்லி சிறுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். நாட்டு மக்களிடம் நீதி கேட்டு அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மல்லை சத்யா அறிவித்துள்ளார்.

The post ஆக. 2ம் தேதி சென்னையில் நடக்கிறது வைகோவுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்: மல்லை சத்யாவின் திடீர் அறிவிப்பால் மதிமுகவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madhu Sathya ,Deputy Secretary General ,Malud Satya ,Secretary General ,Vigo ,Principal Secretary ,Duri Vaigo ,Vaygo ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து