×

பதவி நீக்க பரிந்துரையை எதிர்த்த நீதிபதி யஷ்வந்த் வர்மா மனுவை விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்படும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருமாறு முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பரிந்துரையை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள அதிகாரப்பூர்வ வீட்டில், எரிந்த நிலையில் மூட்டை, மூட்டையாக ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் தற்போதைய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை நாடாளுமன்றத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டு வரக் கோரி உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கடந்த மே 8ம் தேதி பரிந்துரை செய்திருந்தார். அதை ரத்து செய்யக் கோரி நீதிபதி யஷ்வந்த் வர்மா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பாக நேற்று ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நீதிபதி யஷ்வந்த் வர்மா மனுவை உடனடியாக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதற்கு தலைமை நீதிபதி கவாய், ‘‘இந்த செயல்முறையில் நானும் சம்மந்தப்பட்டுள்ளதால், இவ்விவகாரத்தை விசாரிப்பது முறையாக இருக்காது. எனவே மனுவை விசாரிக்க நாங்கள் ஒரு அமர்வை அமைக்கிறோம்’’ என உறுதி அளித்துள்ளார்.

நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது மனுவில், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட விசாரணை குழு, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட கதையை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தியதாக குற்றம்சாட்டி உள்ளார். அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post பதவி நீக்க பரிந்துரையை எதிர்த்த நீதிபதி யஷ்வந்த் வர்மா மனுவை விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்படும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல் appeared first on Dinakaran.

Tags : Justice Yashwant Verma ,Supreme Court ,New Delhi ,Chief Justice ,Sanjiv Khanna ,P.R. Kavai ,Dinakaran ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...