நிலக்கோட்டை, ஜூலை 20: நிலக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் உமா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நிலக்கோட்டை வட்டார விவசாயிகளிடையே பசுந்தாள் உர உபயோகத்தினை பரவலாக்கி அதன் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தினை இந்த ஆண்டு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் மண்ணில் உள்ள உயிர்ம கரிம சத்தினையும், பயிர் மகசூலையும் அதிகரிப்பதாகும்.
இத்திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம். மேலும் நிலம் இல்லாத குத்தகைதாரர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். ஒரு பயனாளி இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு மட்டுமே திட்ட மானியத்தினை பெற முடியும். குறிப்பாக இறவை பாசன விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விவசாயிகள் நேரடியாகவோ, உழவர் செயலில் பதிவு செய்தால் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவர். குறிப்பாக சிறு குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும். விரைவில் பசுந்தாள் விதைகள் விநியோகம் துவங்கப்படும். எனவே அனைத்து விவசாயிகளும் உழவர் செயலியின் மூலம் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் பசுந்தாள் உரத்தினை விதைப்பு செய்த 40 முதல் 45 நாட்களுக்கு பிறகு பூக்கும் தருவாயில் மடக்கி உழவு வேண்டும். இதன்மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்து மண்ணின் வளம் கூடும். மண்ணின் தன்மை மாற்றம் அடைவதால் பயிர்களுக்கு தேவையான அனைத்து வகை சத்துக்களும் தேவையான நேரத்தில் தேவையான அளவு எளிதான முறையில் எடுத்து கொள்ள ஏதுவாக இருக்கும். இந்த பசுந்தாள் உர விதைகளை பயன்படுத்துவதால் செயற்கையான ரசாயன உர பயன்பாட்டுக்கு ஏற்படும் செலவினை கணிசமான அளவு குறைத்து மண்ணின் வளத்தை காப்பதோடு சாகுபடி செலவை குறைத்து அதிகப்படியான லாபம் ஈட்ட முடியும். இதனை நிலக்கோட்டை வட்டார விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post நிலக்கோட்டை வட்டாரத்தில் பசுந்தாள் உர விதைகள் மானியத்தில் பெறலாம்: விவசாயிகளுக்கு அழைப்பு appeared first on Dinakaran.
