×

சண்முகசுந்தரபுரம்-ஜம்புலிபுத்தூர் இடையே சேதமடைந்து காணப்படும் இணைப்புச் சாலை

*சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம் கிராமத்திலிருந்து ஜம்புலிபுத்தூர் ரெங்கசமுத்திரம், வைகை அணை செல்லும் இணைப்பு சாலை மிகவும் சேதமடைந்து காட்சியளிக்கிறது. இதனை சீரமைத்து, புதிய தார்ச்சாலை அமைத்து தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து வைகை அணை சாலையில் உள்ள ஜம்புலிபுத்தூர் கிராமத்திற்கும் மற்றும் ரெங்கசமுத்திரம் கிராமத்திற்கும் இணைப்புச் சாலை உள்ளது. சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த இணைப்பு சாலை போடப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில் தற்போது சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

இந்த சாலையில் பல இடங்களில் சாலை அமைக்கப்பட்டதற்கான அடையாளமே இல்லாத வகையில் கற்குவியலாகவும் பள்ளம் மேடாகவும் காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக இந்த சாலையின் இருபுறமும் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ள நிலையில் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

மேலும் சாலையின் இடையே ஜம்புலிபுத்தூர் கண்மாய் உள்ளது. சாலையின் இரு புறமும் கண்மாய் இருப்பதால் சாலையில் இருந்து சுமார் 10 அடிக்கு மேல் பள்ளம் உள்ளது. இந்த சாலையில் தினம் தோறும் பயணிப்பவர்கள் அச்சத்துடனே பயணித்து வருகின்றனர்.

மேலும் இந்த பகுதியில் இரண்டு தனியார் பள்ளிகளும் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியும் உள்ளதால் பள்ளிக்கு செல்லும் பள்ளி வாகனங்கள் மாணவர்கள் அனைவரும் இந்த சாலையைத் தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் பயணிக்கும் போது பள்ளி வாகனத்தில் செல்லும் குழந்தைகளும் மிகுந்த அச்சத்துடனே தினந்தோறும் சென்று வருகின்றனர்.

சாலையின் இரண்டு பகுதியிலும் தடுப்புகள் இல்லாததால் கண்மாய்க்கான பள்ளம், விவசாய நிலம், விவசாயக் கிணறுகள் உள்ளதால் வாகனங்களில் செல்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர்.
ஆண்டிபட்டி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த சாலையை புதுப்பிக்க வேண்டும் என்று சண்முகசுந்தரபுரம் மற்றும் ஜம்புலிபுத்தூர் பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

எனவே பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் இந்தச் சாலையை புதுப்பித்து‌ தடுப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சண்முகசுந்தரபுரம்-ஜம்புலிபுத்தூர் இடையே சேதமடைந்து காணப்படும் இணைப்புச் சாலை appeared first on Dinakaran.

Tags : Sanmuksundarapuram ,Jambuliputur ,SANMUKSUNDARAPURAM VILLAGE ,ANTIPATI ,JAMBULIPUTHUR RENGASAMUTRAM ,VIAGAI DAM ,Jambulliputur ,
× RELATED தமிழக அரசின் மீது சுமை கூடுவதை...