திருமயம், ஜூலை 18: மாணவர்கள் ராக்கிங் செய்து சிறை சென்றால் அங்குள்ள கைதிகள் சிறைக்குச் செல்லும் மாணவர்களை ராக்கிங் செய்வார்கள் என சட்ட விழிப்புணர்வு முகாமில் மாணவர்களை நீதியரசர் எச்சரித்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் துளையானூர் கிராமத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆலோசனை குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் நீதிபதிகள் சசிகுமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய நீதிபதிகள், பணம் இல்லாதோர் சட்ட உதவிகள் பெற இது போன்ற விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகிறது. சட்ட வழிகாட்டுதலின்படியே அனைத்து அரசுகளும் இங்கு இயங்குகிறது. இந்நிலையில் குற்றச் செயல்களில் மிகவும் மோசமானது கல்லூரியில் நடக்கும் ராக்கிங். கேலி கிண்டலால் பாதிக்கப்பட்ட மாணவர் புகார் அளிக்கும் பட்சத்தில் கேலி செய்த மாணவர்கள் மீது போலீசார் எப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு 15 நாள் சிறையில் அடைக்கப்படுவார். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவர் எந்த ஒரு அரசுப் பணிக்கும் விண்ணப்பிக்க முடியாது. மேலும் இரண்டு வருடம் முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஒரு முறை இதுபோன்ற சிக்கலில் மாணவர்கள் மாட்டிக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் வழக்கிலிருந்து வெளியே வருவது மிகவும் கடினம். எனவே மாணவர்கள் விளையாட்டாக செய்து வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள். மேலும் ராக்கிங் குற்ற வழக்கில் சிக்கி சிறை செல்லும் மாணவர்களை சிறையில் உள்ள கைதிகள் ராக்கிங் செய்வார்கள். சிறைகளில் கைதிகள் பலவிதம். அங்கு ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. மனம் ஒரு குரங்கு மாதிரி எனவே மாணவர்கள் மனதை கட்டுப்படுத்துங்கள். இவ்வாறு அவர் பேசினர்.
மேலும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வுகளையும் மாணவர்களிடம் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஏற்படுத்தினர். முன்னதாக கல்லூரி முதல்வர் (பொ) மோகனசுந்தரம் வரவேற்றார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
The post மாணவர்கள் மனதை கட்டுப்படுத்துங்கள் குற்ற செயல்களில் மிகவும் மோசமானது கல்லூரி ராக்கிங் appeared first on Dinakaran.
