தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் 2025 -2026ம் ஆண்டிற்கு 1.088 டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி சான்று விதைகள் உள்ளிட்டவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை 40 டன் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி விவசாயத்தை பிரதானமாக கொண்ட மாவட்டமாகும். இங்கு சின்னாறு மற்றும் வாணியாறு, தொப்பையாறு, நாகாவதி, கேசர்குலா, தும்பலஅள்ளி, வள்ளிமதுரை அணைகளும், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கே.ஈச்சம்பாடி அணைக்கட்டும் அமைந்துள்ளது. மேலும், பல்வேறு ஆறுகள், ஏரிகள் மூலம் நீர்பாசன வசதி பெற்று விவசாயம் நடைபெற்று வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டும் போதிய மழை பெய்யவில்லை. ஆனால், நடப்பாண்டு பருவமழைக்கு முன்பாகவே மழை பெய்து வருகிறது. கடந்த மே மாதம் முதல் அவ்வவ்போது மழை பெய்து வருகிறது. இதனால், அணை மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்க தொடங்கியது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 942 மில்லி மீட்டர் ஆகும். இதுவரை 254.64 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 2.10 லட்சம். இதில், சிறு குறு விவசாயிகள் எண்ணிக்கை 1.90 லட்சம். தர்மபுரி மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விவசாயம் விளங்குகிறது. மாவட்டத்தில் உள்ள மொத்த பரப்பளவான 4 லட்சத்து 43 ஆயிரத்து 741 ஹெக்டரில், 1 லட்சத்து 66 ஆயிரத்து 843 ஹெக்டர் சாகுபடி பரப்பாக கொண்டுள்ளது. பெரும்பாலும் மானாவாரி நிலங்களில் ராகி, கம்பு, சோளம் மற்றும் பயறு வகை பயிர்கள் பயிரிடுகின்றனர். விவசாய உற்பத்தியை உயர்த்த வேண்டி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட வேளாண் அதிகாரிகள் கூறுகையில், ‘வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து, அரசு அறிவித்து செயல்படுத்தி வரும் அனைத்துத் திட்டங்களையும், விவசாயிகளுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையில் 2025 -2026ம் ஆண்டிற்கு 1 லட்சத்து 72 ஆயிரத்து 280 ஹெக்டர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் கடந்த ஜூன் 25ம் தேதி வரை, 4,180 ஹெக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வேளாண் பயிர்களின் உற்பத்தியை பெருக்கும் பொருட்டு 2025-2026ம் ஆண்டிற்கு 1.088 டன் நெல், சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி சான்று விதைகள் உள்ளிட்டவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வரையிலும் 40 டன் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது,’ என்றனர்.
The post நடப்பாண்டு 1,088 டன் விதைகள் வழங்க இலக்கு appeared first on Dinakaran.

