தர்மபுரி, ஜூலை 18: ஆடி மாதம் துவங்கியதைடுத்து, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் நேற்று தொடங்கியது. ஆடி 1ம் தேதியையொட்டி, இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோயிலில் அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 9 மணியளவில் சிறப்பு அலங்காரமும், தொடர்ந்து விசேஷ பூஜைகளும் நடந்தது. இதையடுத்து, அம்மன் வீதி உலா வந்து அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் ஊர் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதேபோல், ஆலிவாயன்கொட்டாயில் உள்ள பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில் கல்யாண காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.
ஆடி பிறப்பை முன்னிட்டு, அரூர் அடுத்துள்ள தீர்த்தமலையில்யில் தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர். இதேபோல, இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றங்கரையில், புதுமண தம்பதிகள் புனித நீராடி தாலி மாற்றி வழிபட்டனர். ஆடி வந்தாலே பண்டிகைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். ஆடி முதல் நாள் தேங்காய் சுட்டு வழிபடுவது வழக்கம். அரூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று புதுமண தம்பதிகள் குடும்பமாக சேர்ந்து தேங்காய் சுட்டு வழிபட்டனர். பின்னர், சுட்ட தேங்காயை பிரித்து சுவாமிக்கு படையலிட்டு உறவினர்களுக்கு பகிர்ந்தளித்து மகிழ்ந்தனர்.
The post அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

