×

தியாகிகள் கல்லறைக்குச் செல்ல அனுமதி மறுப்பு காஷ்மீர் முதல்வரை தடுத்து நிறுத்திய போலீசார்: சுவர் ஏறி குதித்து சென்று அஞ்சலி செலுத்திய உமர் அப்துல்லா


ஸ்ரீநகர்: காஷ்மீரை மகாராஜா ஹரி சிங் ஆட்சி செய்து கொண்டிருந்தபோது 1931ஆம் ஆண்டு ஏற்பட்ட கிளர்ச்சியில் கொல்லப்பட்ட 21 பேரின் நினைவாக ஸ்ரீநகரில் தியாகிகளின் கல்லறை அமைக்கப்பட்டது. அவர்களின் நினைவாக ஜூலை 13ஆம் தேதியை தியாகிகள் நினைவு தினமாக தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட சில இயக்கங்கள் அனுசரித்து வருகின்றன. இந்த ஆண்டு தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் நினைவிடம் நோக்கி முதல்வர் உமர் அப்துல்லா சென்றபோது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால், வாகனத்தில் இருந்து கீழே இறங்கி நடந்து சென்றார். அவருடன் கட்சியினரும், பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் சென்றனர்.

கல்லறைக்குள் செல்வதற்கான வாசல் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கல்லறையின் சுற்றுச் சுவர் மீது ஏறி பின்னர் அதன் மீது அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் மீதும் ஏறி கீழே குதித்து உமர் அப்துல்லா கல்லறைக்குள் சென்றார்.அதன் பிறகு வாசல் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கல்லறைக்குள் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், அங்குள்ள நினைவிடங்களில் மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினர். இது குறித்து உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,’தியாகிகளின் கல்லறைகளில் எனது அஞ்சலியைச் செலுத்தினேன்.

தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கம் என்னை நடந்து செல்ல கட்டாயப்படுத்தியது. என் வழியைத் தடுக்க முயன்றது. கல்லறை வாயிலில் தடுத்து நிறுத்தி, சுவரில் ஏறும்படி கட்டாயப்படுத்தினர். அவர்கள் என்னை தடுக்கவும் பிடிக்கவும் முயன்றனர். ஆனால், அவர்களால் என்னை தடுக்க முடியவில்லை’ என தெரிவித்துள்ளார். மேலும், போலீசார் அவரை தடுக்க முயலும் வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

The post தியாகிகள் கல்லறைக்குச் செல்ல அனுமதி மறுப்பு காஷ்மீர் முதல்வரை தடுத்து நிறுத்திய போலீசார்: சுவர் ஏறி குதித்து சென்று அஞ்சலி செலுத்திய உமர் அப்துல்லா appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Chief Minister ,Omar Abdullah ,Srinagar ,Maharaja Hari Singh ,Martyrs' Memorial Day ,National Conference… ,Dinakaran ,
× RELATED எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு...