×

திருவள்ளுவர் மீது கருத்தியல் சாயம் பூசும் அடாவடித்தனத்தை எதிர்க்க வேண்டும்: முதல்வர் பேச்சு

சென்னை: வள்ளுவர் மீது கருத்தியல் சாயம் பூசும் அடாவடித்தனத்தை தமிழ் சமுதாயம் எதிர்க்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை காமராசர் அரங்கத்தில் வைரமுத்து எழுதிய ‘‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’’ நூல் வெளியிட்டு விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூலினை வெளியிட்டார். இந்த விழாவில், ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் தலைமைச்செயலர் இறையன்பு, முனைவர் பர்வீன் சுல்தானா, அமைச்சர்கள் , நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திருக்குறள் இரண்டு அடிதான்; ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, அதற்கு புதுப்புது பொருள்கள் சொல்லி, உலக மக்கள் எல்லோருக்கும் புதுவழியை நல்வழியை சொல்ல கூடிய உலக இலக்கியமாக உயர்ந்து நிற்கிறது. அதனால்தான், மணக்குடவர் பரிமேலழகர் தொடங்கி கலைஞர் உள்ளிட்ட ஏராளமானோர் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்கள். அந்த வரிசையில்தான், கவிப்பேரரசு வைரமுத்துவும் இணைந்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் முன்னுரையில், “திராவிடப் பண்பாட்டை ஆரியப் பண்பாடு நகர்த்தவோ, தகர்க்கவோ முனைந்த காலக்கட்டத்தின் விளிம்பில் தமிழ் மரபு காக்கும் தனிப்பெரும் அரணாக வள்ளுவம் எழுந்தது”என்று சொல்லி, இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றை தன்னுடைய சொற்களில் எடுத்துச் சொல்லிவிட்டார். திருக்குறள் தமிழில் எழுதப்பட்டு இருந்தாலும், இது தமிழர்களான நமக்கு மட்டும் சொந்தமான நூல் கிடையாது.

அதனால்தான், திருக்குறளின் பொருளை உணர்ந்த பெரியார் “80 ஆண்டுகளுக்கு முன்பே, திருக்குறள் மாநாடுகளை நடத்தினார்”. திருக்குறளை அச்சிட்டுப் பரப்பினார். மதங்களை வெறுத்த அவர், “உங்கள் மதம், குறள் மதம் என்று சொல்லுங்கள். “உங்கள் நெறி குறள் நெறி என்று சொல்லுங்கள்” என்று சொன்னார். திருக்குறளில் வெளிப்படாத மறைபொருள் இன்னும் நிறைய இருக்கிறது என்று ஏராளமான அறிஞர்கள் தங்களின் அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தி உரை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஈராயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வரிகளுக்கான தேவை இன்றைக்கும் இருக்கிறது. காலங்கள் கடந்து வாழும் வள்ளுவர் மறையை – இந்திய நாட்டின் தேசிய நூலாக அறிவிக்கும் முயற்சியில் நாம் இன்னும் அதிகமாக கவனம் செலுத்தியாக வேண்டும். இதற்காக திருக்குறளின் சிறப்பை முழுமையாக சொல்லும் வகையிலான மாபெரும் அமைப்பை தலைநகர் டெல்லியில் நாம் உருவாக்கியாக வேண்டும்.

மனிதத்திற்கு வள்ளுவத்தை பரப்புவதோடு, எதிரான கருத்தியல் வண்ணங்களை அவர் மேல் பூச முயற்சிக்கும் அடாவடித்தனத்தை ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் எதிர்க்க வேண்டும். சொந்தம் கொண்டாடுவதற்கு ஆரியத்தில் ஆள் இல்லாத காரணத்தால், நம்முடைய வள்ளுவரைக் காவியடித்து திருடப் பார்க்கிறார்கள். ‘திருட’ என்பதைவிட ஏமாற்ற பார்க்கிறார்கள் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

The post திருவள்ளுவர் மீது கருத்தியல் சாயம் பூசும் அடாவடித்தனத்தை எதிர்க்க வேண்டும்: முதல்வர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Thiruvalluvar ,Chief Minister ,Chennai ,M.K. Stalin ,Valluvar ,Tamil Nadu ,Vairamuthu ,Kamaraj Arangam ,Dinakaran ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...