×

திருவண்ணாமலை – நரசப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் திருப்பதி, காளஹஸ்தி செல்லும் பக்தர்களுக்கும் பயன் ஆந்திர மாநில பக்தர்களின் வசதிக்காக

திருவண்ணாமலை, ஜூலை 11: திருவண்ணாமலையில் இருந்து ஆந்திர மாநிலம் நரசப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை நேற்று தொடங்கியது. அதன்மூலம், திருவண்ணாமலைக்கு வரும் ஆந்திர மாநில பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் தென்னகத்தின் புகழ்மிக்க சைவத்திருத்தலமாகும். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழும் அண்ணாமலையார் கோயிலை தரிசிக்க சமீப காலமாக வெளி மாநில பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநில பக்தர்களின் வருகையால் திருவண்ணாமலை நகரம் தினமும் பக்தர்கள் வெள்ளத்தில் திணறும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ஆந்திர மாநில பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்பது அம்மாநில பக்தர்களின் கோரிக்கையாக இருந்தது. எனவே, ஆந்திர மாநிலம் மற்றும் வட மாநிலங்களுக்கு திருவண்ணாமலையில் இருந்து நேரடி ரயில் சேவையை இயக்க வேண்டும் என திருவண்ணாமலை தொகுதி எம்பி சி.என்.அண்ணாதுரை, மக்களவையிலும், தெற்கு ரயில்வே உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்திலும் தொடர்ந்து வலியுறுத்தினார். அதேபோல், ஆன்மிக பக்தர்கள் மற்றும் ஏபிஜிபி அமைப்பினரும் இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன் எதிரொலியாக, திருவண்ணாமலையில் இருந்து ஆந்திர மாநிலம் நகரசப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதித்தது.

அதன்படி, திருவண்ணாமலையில் இருந்து தனது முதல் பயணத்தை நேற்று வாராந்திர சிறப்பு ரயில் தொடங்கியது. திருவண்ணாமலையில் காலை 11 மணிக்கு புறப்பட்டு வேலூர், காட்பாடி, சித்தூர், பாகலா, திருப்பதி, ரேணுகுண்டா, நெல்லூர், ஓங்கல், சித்ரலா, பபட்லா, தெனாலி, விஜயவாடா, குடிவாடா, பிம்மவரம், பலகோலூ வழியாக நரசப்பூர் ரயில் நிலையத்தை நள்ளிரவு 2 மணிக்கு சென்றடையும். அதேபோல், நரசபுரத்தில் பகல் 1 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு அதிகாலை 4.55 மணிக்கு வந்தடையும்.

மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்கான கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை – நரசபூர் வாராந்திர சிறப்பு ரயில், இந்த மாதத்தில் 17ம் தேதி, 24ம் தேதி, ஆகஸ்ட் மாதத்தில் 7ம் தேதி, 14ம் தேதி, 21ம் தேதி, செப்டம்பர் மாதத்தில் 4ம் தேதி, 25ம் தேதி ஆகிய நாட்களில் திருவண்ணாமலையில் இருந்து இந்த சிறப்பு ரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை – நரசப்பூர் சிறப்பு ரயில் இயக்கப்படுவதால், திருவண்ணாமலை மற்றும் திருப்பதி, காளஹஸ்தி செல்லும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

The post திருவண்ணாமலை – நரசப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் திருப்பதி, காளஹஸ்தி செல்லும் பக்தர்களுக்கும் பயன் ஆந்திர மாநில பக்தர்களின் வசதிக்காக appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Narasappur ,Tirupati, Kalahasti ,Andhra Pradesh ,Annamalaiyar Temple ,Saiva ,
× RELATED மதுபாட்டில்கள் பதுக்கி கூடுதல்...