×

ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா படத்தின் பெயரை மாற்ற தயாரிப்பாளர்கள் சம்மதம்

திருவனந்தபுரம்: சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடித்த ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா என்ற மலையாளப் படம் கடந்த மாதம் திரைக்கு வர இருந்தது. ஆனால் ஜானகி என்ற பெயரை மாற்றாவிட்டால் படத்தை வெளியிட அனுமதி தர முடியாது என்று சென்சார் போர்டு கூறியது. மேலும் படத்தில் 96 இடங்களில் ஜானகி என்ற பெயர் உச்சரிக்கப்படுகிறது. அதையும் நீக்க வேண்டும் என்று சென்சார் போர்டு கூறியது.

இதை ஏற்க மறுத்த சினிமா தயாரிப்பு நிறுவனம், சென்சார் போர்டின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள உயர்நீதிமன்றத்தை அணுகியது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி நகரேஷ் முன்னிலையில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. படத்தை பார்த்த பிறகு முடிவை தீர்மானிக்கலாம் என்று நீதிபதி நகரேஷ் கூறினார். இதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் நீதிபதிக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது சென்சார் போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியது: படத்தில் கதாபாத்திரத்தின் பெயர் ஜானகி வித்யாதரன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே படத்தின் பெயரை வி. ஜானகி என்றோ ஜானகி, வி என்றோ மாற்றலாம். மேலும் நீதிமன்ற காட்சிகளில் குறுக்கு விசாரணையின் போது 2 இடங்களில் ஜானகி என்ற பெயரை மியூட் செய்ய வேண்டும். மற்ற இடங்களில் ஜானகியின் பெயரை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த மாற்றங்களை செய்தால் உடனடியாக படத்திற்கு அனுமதி அளிக்கத் தயார். இவ்வாறு அவர் வாதிட்டார். இதை படத்தின் தயாரிப்பாளர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணையை 16ம் தேதிக்கு நீதிபதி நகரேஷ் ஒத்தி வைத்தார்.

The post ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா படத்தின் பெயரை மாற்ற தயாரிப்பாளர்கள் சம்மதம் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Suresh Gopi ,Anupama Parameswaran ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...