×

கல்லூரி மாணவி பலாத்கார சர்ச்சை; திரிணாமுல் காங்கிரசில் வெடித்தது மோதல்: பெண் எம்பியை விளாசிய மற்றொரு எம்பி

கொல்கத்தா: கல்லூரி மாணவி பலாத்கார சர்ச்சைக்கு மத்தியில் திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பியை மற்றொரு எம்பி தனிப்பட்ட முறையில் தாக்கி பேசிய விவகாரம் மோதலாக மாறியுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தெற்கு கொல்கத்தா சட்டக்கல்லூரியில் 24 வயது சட்ட மாணவி ஒருவர் கல்லூரி வளாக அறையில் வைத்து மூன்று பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், திரிணாமுல் மாணவர் பேரவையுடன் தொடர்புடைய முன்னாள் மாணவர் மனோஜித் மிஸ்ரா உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.பி. கல்யாண் பானர்ஜி கூறுகையில், ‘நண்பனே நண்பனை பாலியல் பலாத்காரம் செய்தால், எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும்? பள்ளி, கல்லூரிகளில் காவல்துறையை நிறுத்த முடியுமா?’ என்று கூறினார். அதேபோல் திரிணாமுல் எம்.எல்.ஏ மதன் மித்ரா கூறுகையில், அந்த மாணவி அங்கே செல்லாமல் இருந்திருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்காது’ என்று பாதிக்கப்பட்டவரையே குற்றம் சாட்டியதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்தக் கருத்துகளுக்குக் கடும் கண்டனம் எழுந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிவிப்பில், ‘இது அவர்களின் தனிப்பட்ட கருத்து; இதற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று கூறி இப்பிரச்னையில் இருந்து விலகிக்கொண்டது.

கட்சியின் இந்த நிலைப்பாட்டை ஆதரித்த சக எம்.பி மஹுவா மொய்த்ரா, ‘கல்யாண் பானர்ஜி மற்றும் மதன் மித்ராவின் கருத்துக்கள் அருவருப்பானது’ என்று விமர்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த கல்யாண் பானர்ஜி, மஹுவா மொய்த்ராவை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசினார். அவர் கூறுகையில், ‘அவர் (மஹுவா மொய்த்ரா) பெண்களுக்கு எதிரானவர். 40 வருட குடும்பத்தைக் கெடுத்து, 65 வயது நபரைத் திருமணம் செய்துகொண்டவர்’ என்று மஹுவாவின் தனிப்பட்ட திருமண வாழ்க்கையைக் குறிப்பிட்டுப் பேசியது, கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில், சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எம்.எல்.ஏ மதன் மித்ராவுக்குக் கட்சி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட எம்.பி கல்யாண் பானர்ஜி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

The post கல்லூரி மாணவி பலாத்கார சர்ச்சை; திரிணாமுல் காங்கிரசில் வெடித்தது மோதல்: பெண் எம்பியை விளாசிய மற்றொரு எம்பி appeared first on Dinakaran.

Tags : TRINAMUL CONGRESS ,Kolkata ,Trinamool Congress ,South Kolkata Law College ,Kolkata, Western State ,
× RELATED அன்புமணி பாமகவில் உறுப்பினர் கூட...