×

போதைப் பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவை கைது செய்வதற்கு 5 தனிப்படைகள் அமைப்பு : மச்சான்ஸ்’ நடிகை உள்பட 2 நடிகையும் சிக்குகின்றனர்!!

சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நடிகர் கிருஷ்ணாவை கைது செய்வதற்கு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பார் ஒன்றில் கடந்த மே 22ம் தேதி நடந்த அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக ஐடி விங்க் நிர்வாகி பிரசாத் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, பிரசாத் போதைப்பொருள் விற்பனை கும்பலுடன் நேரடி தொடர்பில் இருந்தது தெரியவந்தது. பிரசாத் ‘தீங்கிரை’ என்ற பெயரில் புதிய படம் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஹீரோவாக நடிகர் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார். இதனால் நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோருக்கு கொக்கைன் என்ற போதைப் பொருளை அடிக்கடி பிரசாத் வாங்கி கொடுத்து வந்தது தெரியவந்தது.
.
விசாரணையில், முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் அறிமுகம் செய்து வைத்த பிரதீப்குமார் மூலம் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2023ம் ஆண்டு முதல் 40 முறை அதாவது ரூ.4.72 லட்சத்திற்கு கொக்கைன் வாங்கி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நுங்கம்பாக்கம் லேக் வியூ பகுதியில் வசித்து வரும் நடிகர் ஸ்ரீகாந்தை பிடித்து அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருள் வாங்கியதாக ‘மச்சான்ஸ்’ நடிகை, மேலும் ஒரு நடிகையும் சிக்குகிறார்கள்.

இதனிடையே முன்னணி நடிகர்களில் ஒருவரான கழுகு திரைப்பட நடிகர் கிருஷ்ணா, பிரதீப்குமாரிடம் கொக்கைன் வாங்கி பயன்படுத்தியது உறுதியாகி உள்ளது. இதனால் அந்த நடிகரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்பு கொண்டு விசாரணை நடத்த நேற்று அழைத்தனர்.அப்போது அந்த நடிகர் ‘நான் படப்பிடிப்பு தொடர்பாக கேரளாவில் உள்ளேன். சென்னை வந்ததும் நேரில் வருகிறேன்’ என்று கூறியுள்ளார். அதன்படி போலீசார் அந்த நடிகருக்கு முறைப்படி சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நடிகர் போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் தற்போது தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து, நடிகர் கிருஷ்ணாவை கைது செய்வதற்கு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.செல்போன் ஆஃப் செய்திருப்பதால் சைபர் கிரைம் மூலம் அவரின் இருப்பிடத்தைக் கண்டறிய முயற்சி நடந்து வருகிறது.

The post போதைப் பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவை கைது செய்வதற்கு 5 தனிப்படைகள் அமைப்பு : மச்சான்ஸ்’ நடிகை உள்பட 2 நடிகையும் சிக்குகின்றனர்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Srikanth ,Krishna ,Nungambakk, Chennai ,Nungambakk ,Dinakaran ,
× RELATED உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதிப் போட்டி:...