×

மாவட்டம் முழுவதும் சீரான குடிநீர் சப்ளைக்கு நடவடிக்கை அமைச்சர் ராஜேந்திரன் உத்தரவு

சேலம், ஜூன் 25: சேலம் மாவட்டம் முழுவதும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆய்வு கூட்டம், அஸ்தம்பட்டி பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி முன்னிலை வகித்தார்.

கூட்டத்திற்கு தலைமை வகித்து அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது:
தமிழ்நாடு முதல்வர் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து கண்காணித்திட அறிவுறுத்தியுள்ளார். அதன்படி சேலம் மாவட்டம் முழுவதும் குடிநீர் தொடர்பான பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் என அனைத்துப் பகுதிகளுக்கும் வழங்கப்படும் குடிநீரின் அளவு மற்றும் குடிநீரின் தேவைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மாவட்டம் முழுவதும் சீரான குடிநீர் விநியோகம் வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் எவ்வித மின்தடையும் இல்லாமல் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.

குடிநீர் குழாய்களில் உடைப்புகள் ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளில் ஏதேனும் இடர்பாடு ஏற்படும் பட்சத்தில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரன் பேசினார். தொடர்ந்து, மாவட்டத்தில் நடந்து வரும் குடிநீர் மேம்பாட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குருராஜன், மாநகரப் பொறியாளர் செல்வநாயகம், செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், திலகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மாவட்டம் முழுவதும் சீரான குடிநீர் சப்ளைக்கு நடவடிக்கை அமைச்சர் ராஜேந்திரன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Rajendran ,Salem ,Tourism Minister ,Salem district ,Asthampati ,Dinakaran ,
× RELATED அனுமதியின்றி மண் அள்ளிய லாரி பறிமுதல்