கெங்கவல்லி, டிச. 24: ஆத்தூர் அருகே, மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, மலைவாழ் மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்தூர் அருகே கீரிப்பட்டி பேரூராட்சி, கீழ்தொம்பை மலைக்கிராமத்தில், 800க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால், கடந்த 21.3.2009ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 21 அடி அகலத்துக்கு பாதை ஏற்படுத்தப்பட்டது. இந்த வழிப்பாதையில், கடந்த 5 மாதங்களுக்கு முன், கீரிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொண்ட போது, அப்பகுதியை சேர்ந்த சிலர் பணியை தடுத்து நிறுத்தினர். பின்னர், இது நாள் வரை மயான பாதை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இதனை கண்டித்து மலைவாழ் மக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், வீடுகள் மற்றும் தெருக்களில் கருப்பு கொடிகளை கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூர் தாசில்தார் பாலாஜி, தனி தாசில்தார் ஜெயலட்சுமி (ஆதி திராவிடர் நலம்), மல்லியகரை இன்ஸ்பெக்டர் (பொ) சண்முகம் ஆகியோர், மலைவாழ் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இன்று போலீஸ் பாதுகாப்புடன் அளவீடு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி, பின்னர் கான்கிரீட் சாலை அமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை ஏற்று, மலைவாழ் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
