×

கொலை முயற்சி வழக்கில் போலீசிடம் இருந்து தப்ப குளத்துக்குள் பாய்ந்த வாலிபரை கைது செய்த தனிப்படை

நாகர்கோவில் : தக்கலை அருகே கொலை முயற்சி வழக்கில் வாலிபரை பிடிக்க போலீசார் முயன்ற போது குளத்துக்குள் பாய்ந்து பதுங்கினார். தீயணைப்பு துறை உதவியுடன் படகில் சென்று அவரை போலீசார் கைது செய்தனர்.குமரி மாவட்டம் தக்கலை அடுத்த காட்டாத்துறை அருகே உள்ள குருவிளைக்காடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (43). கொத்தனார்.

இவர், காட்டாத்துறையில் விஜி என்பவர் நடத்தி வரும் இறைச்சி கடைக்கு இறைச்சி வாங்க செல்வது வழக்கம். அங்கு வரும் விஜியின் நண்பர்களான காட்டாத்துறை புலையன்விளையை சேர்ந்த விஜின்குமார் (43), பறக்கை கக்கன்புதூரை சேர்ந்த ஸ்டாலின் (33) ஆகியோர் ஸ்டீபனுக்கு அறிமுகம் ஆனார்கள். இந்த நிலையில் சம்பவத்தன்று ஸ்டீபன் கடைக்கு இறைச்சி வாங்க சென்ற போது, விஜி மற்றும் அவரது நண்பர்கள் விஜின்குமார், ஸ்டாலின் ஆகியோர் ஸ்டீபனை கேலியாக பேசியுள்ளனர்.

இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று முன் தினம் இரவு 8.30 மணியளவில் குருவிளைகாடு சந்திப்பு பகுதியில் நின்ற ஸ்டீபனை, விஜி, விஜின்குமார், ஸ்டாலின் ஆகியோர் வழி மறித்து தகராறு செய்து, அரிவாளாலும் வெட்டினர். இதில் ஸ்டீபன் பலத்த காயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து ஸ்டீபன் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, சப் இன்ஸ்பெக்டர் இமானுவேல் ஆகியோர் விசாரணை நடத்தி, விஜி, விஜின்குமார், ஸ்டாலின் ஆகிய 3 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதில் விஜி, விஜின்குமார் ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர். ஸ்டாலினை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை அவர் பறக்கை பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் எஸ்.ஐ. இமானுவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது குளத்தின் கரையில் அமர்ந்திருந்த ஸ்டாலின், தனிப்படை போலீசாரை பார்த்ததும் குளத்துக்குள் பாய்ந்தார்.

அந்த குளம் தாமரையால் நிரம்பி உள்ளது. ஸ்டாலின் அதற்குள் நீருக்குள் பதுங்கி இருந்தார். அவர் வெளியே வருவார் என போலீசார் காத்திருந்தனர். ஆனால் ஸ்டாலின் வெளிேய வரவில்லை. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்பு துறை உதவி கோட்ட அலுவலர் இமானுவேல் தலைமையிலான தீயணைப்பு துறையினர், குளத்துக்குள் இறங்கி, படகில் ஸ்டாலினை பிடித்து கொண்டு வந்தனர்.

பின்னர் அவர் தக்கலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் பறக்கை குளத்தை சுற்றி பொதுமக்கள் திரண்டனர். இதனால் அப்பகுதி சுமார் 1 மணி நேரம் பரபரப்பாக இருந்தது. நடிகர் வடிவேல் காமெடி காட்சி ஒன்றில் போண்டா மணி குளத்துக்குள் மூழ்கி, போலீசாரை ஏமாற்றுவார். கரையில் இருக்கும் வடிவேலிடம் எதுவும் சொல்லாமல், எதையும் சொல்லி விடாதீர்கள் என கூறி விட்டு செல்வார். அந்த காமெடி காட்சியை நினைவு கூறும் வகையில் இந்த கைது காட்சிகள் அமைந்திருந்தன.

The post கொலை முயற்சி வழக்கில் போலீசிடம் இருந்து தப்ப குளத்துக்குள் பாய்ந்த வாலிபரை கைது செய்த தனிப்படை appeared first on Dinakaran.

Tags : Nagarko ,Takala ,Kumari District Takkala ,Kattadura ,Dinakaran ,
× RELATED பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது