×

ஜி7 உச்சி மாநாட்டின் இடையே கனடா பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை: மீண்டும் தூதர்களை நியமிக்க ஒப்புதல்

கனனாஸ்கிஸ்: கனடாவின் ஒட்டவா நகரில் கடந்த ஆண்டு அக்டோபரில் காலிஸ்தான் தீவிரவாத நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்திய அரசுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக அப்போது, கனடா பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை மறுத்த இந்தியா, காலிஸ்தான் அமைப்புகள் கனடா மண்ணில் செயல்பட ட்ரூடோ அரசு அனுமதித்ததாக கூறியது. இந்த விவகாரத்தால் இரு நாடுகள் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டு, கனடாவில் இருந்த இந்திய தூதர் உட்பட 6 தூதரக அதிகாரிகள் வாபஸ் பெறப்பட்டனர்.

அதே போல, இந்தியாவில் உள்ள கனடா தூதர்களும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றார். இந்தியாவுடன் மீண்டும் உறவை புதுப்பிக்க கார்னி விரும்பியதைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையேயான விரிசல் சீராகத் தொடங்கியது. இந்நிலையில், கார்னி அழைப்பின் பேரில் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கனடா சென்றார். கனனாஸ்கிஸ் நகரில் மாநாட்டின் இடையே பிரதமர் மோடி, மார்க் கார்னி இடையேயான சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்புக்கு முன்பாக பிரதமர் மோடி அளித்த பேட்டியில், ‘‘தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற கார்னிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா, கனடா இடையேயான உறவு மிகவும் முக்கியமானது. இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அடைய வேண்டும் என நம்புகிறேன்’’ என்றார். பின்னர், கார்னி உடனான சந்திப்பு சிறப்பாக நடந்ததாக தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்ட பிரதமர் மோடி ஜி7 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பாராட்டுக்களை தெரிவித்தார். ஜி7 மாநாட்டில் தொடக்க உரையாற்றிய பிரதமர் மோடி, மாநாட்டில் பிரதமர் மோடியை வரவேற்பது தனக்கு கிடைத்த பெரிய மரியாதை என கார்னி குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவும் கனடாவும் பரஸ்பரம் தங்களின் தலைநகரங்களில் மீண்டும் தூதர்களை நியமிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். முன்னதாக, மாநாட்டின் இடையே, பிரதமர் மோடி தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலி அதிபர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது, பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு பிரதமர் மோடி நன்றி கூறினார்.
கனடா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து குரோஷியா சென்றார்.

* உக்ரைன் விவகாரத்தில் கூட்டறிக்கை இல்லை
ஜி7 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதியிலேயே புறப்பட்டுச் சென்ற நிலையில் நிறைவு நாளில் இந்த அமைப்பின் 6 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில், இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இடம் பெற்றன. ஆனால், உக்ரைன் விவகாரத்தில் மட்டும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மாநாட்டில் நேரில் பங்கேற்று, ரஷ்யாவுக்கு எதிராக போர் நிறுத்தம் அவசியம் என்றும் அதற்கான அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தியும் கூட்டறிக்கையில் உக்ரைன் விவகாரம் இடம் பெறவில்லை. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு அழுத்தம் தர டிரம்ப் விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், உக்ரைனுக்கு தங்களின் தனிப்பட்ட ஆதரவு இருப்பதாக 6 நாடுகளின் தலைவர்களும் ஜெலன்ஸ்கியிடம் தெரிவித்தனர்.

* தீவிரவாதத்தை இனப்பெருக்கம் செய்யும் பாக்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் பேசினார். மாநாட்டில் உரையாற்றிய அவர், ‘‘தீவிரவாதத்திற்கு எதிராக உலகளாவிய நடவடிக்கை தேவை. உலகளாவிய அமைதி, செழிப்புக்கு சிந்தனை, கொள்கை தெளிவாக இருக்க வேண்டும். எந்த நாடு தீவிரவாதத்தை ஆதரித்தாலும், அது அதற்கான விலையை கொடுக்க வேண்டும். இந்தியாவின் அண்டை நாடு தீவிரவாதத்தின் இனப்பெருக்கக் களமாக மாறி உள்ளது. இந்த சவாலை கண்டும் காணாமல் இருப்பது மனிதகுலத்திற்கு செய்யும் துரோகம். எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

The post ஜி7 உச்சி மாநாட்டின் இடையே கனடா பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை: மீண்டும் தூதர்களை நியமிக்க ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Modi ,Prime Minister of ,Canada ,G7 summit ,Kananaskis ,Nijjar ,Ottawa, Canada ,Justin Trudeau ,Prime Minister of Canada ,Indian government ,India ,
× RELATED இந்தியர்கள் அதிகம் பேர் சுற்றுலா...