×

1185 டன் நெல் நேரடி கொள்முதல்

 

நாமக்கல், ஜூன் 18: நாமக்கல் மாவட்டத்தில், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம், 1,185 டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதற்குண்டான தொகை ரூ.2,90,10,990 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. காவிரி பாசனம் மற்றும் ஏரி பாசனம், வாய்க்கல் பாசனத்தை நம்பி நெல் சாகுபடியில், மாவட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

தவிர வாழை, மக்காச்சோளம், மற்றும் தோட்டக்கலை பயிர்கள், எண்ணை வித்து பயிர்கள், நாமக்கல் மாவட்டத்தில் அதிகம் சாகுபடி செய்யப்பட்டாலும், பிரதான சாகுபடியாக நெல் சாகுபடி இருந்து வருகிறது. விவசாயிகள் நெல் சாகுபடி செய்யும் பரப்பை ஆண்டுதோறும் அதிகரிக்க வேளாண்மைத்துறை அதிகாரிகள், தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்பகுதியிலும் விவசாயிகளுக்கு தட்டுபாடு இன்றி கிடைக்க வேளாண்மைத்துறை அதிகாரிகள் உரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

2024-2025ம் ஆண்டு பள்ளிபாளையம் பகுதியில் 9,920 ஏக்கரிலும், சேந்தமங்கலம் தாலுகா எருமப்பட்டி வட்டாரத்தில் 5,425 ஏக்கரிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி பரவலாக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் திட்டத்தின்படி, 2024 விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக, நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் அருகே எலந்தகுட்டை மற்றும் கலியனூர் அக்ரகாரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்துள்ளது.

இவை கடந்த ஜனவரி மாதம் முதல் செயல்பட்டு வந்தன. மேலும் எருமப்பட்டி வட்டாரத்தில் கோணங்கிப் பட்டியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இதன்மூலம் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 246 விவசாயிகளிடம் இருந்து 1,185.360 மெட்ரிக் டன் நெல் நேரடி கொள்முதல் நிலையங்களின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உமா கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு நெல் சாகுபடி செய்த விவசாயிகளிடம் இருந்து, சன்னரக நெல் கிலோ ஒன்றுக்கு ரூ.24.50 மற்றும் பொது ரகம் நெல் கிலோ ஒன்றுக்கு ரூ.24.05 வீதம், சன்னரகம் நெல் 1117.960 மெட்ரிக் டன் மற்றும் பொது ரகம் 67.400 மெட்ரிக் டன் ஆக மொத்தம் 1185.360 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதற்குண்டான தொகை ரூ.2,90,10,990 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

The post 1185 டன் நெல் நேரடி கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal district ,Dinakaran ,
× RELATED 23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்