×

டெல்லி மதராசி கேம்ப் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: டெல்லி மதராசி கேம்ப் பகுதியில் வீடிழந்த தமிழ் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உ்த்தரவிட்டுள்ளார். டெல்லி, ஜங்புரா பகுதியில், மதராசி கேம்ப் எனப்படும் குடிசைப் பகுதியில் தமிழர்களின் வீடுகள் இடித்து அகற்றப்பட்டுள்ள சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதை உறுதி செய்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி டெல்லி முதல்வர் ரேகா குப்தாக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தார். முதல்வர் எழுதியிருந்த கடிதத்தில், பாதிக்கப்பட்ட 370 தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு டெல்லி முதல்வருக்கு தனது கடிதத்தில் கோரியிருந்தார்.

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவிற்கான அடுக்குமாடிக் குடியிருப்புகளை முழுமையாகப் பூர்த்தி செய்து, பாதிக்கப்பட்ட உரிமை பெற்ற 189 குடும்பங்களுக்கு வழங்கிடவும், விரைவான சமூக உள்கட்டமைப்பு மற்றும் பிரத்யேகமான போக்குவரத்து சேவைகளை வழங்கிடவும் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விடுத்திருந்தார்.
மேலும் டெல்லி நிர்வாகம் இந்தப் பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுகி, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும், இடம்பெயர்ந்த அனைத்துக் குடும்பங்களுக்கும் சுமூகமான, கண்ணியமான மறுவாழ்வை உறுதி செய்வதற்கு அனைத்து வகையிலும் தமிழ்நாடு அரசு உதவத் தயாராக இருப்பதாகவும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் பாதிக்கப்பட்ட 370 தமிழர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், சிறப்பு நிகழ்வாக வீடுகளை இழந்தவர்களுக்கு ஒருமுறை நிதியுதவியாக தலா ரூ.8 ஆயிரம் வழங்கிடவும், அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், மசாலாப் பொருட்கள் அடங்கிய ரூ.4 ஆயிரம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிடவும் ஏதுவாக நேற்று முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார். இவ்வாறு தமிழ்நாடு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

The post டெல்லி மதராசி கேம்ப் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Delhi Madrasi Camp ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Madrasi Camp ,Delhi ,Tamils ,Jangpura ,Madrasi ,Camp ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது