×

கொரோனா பாதிப்பால் அச்சப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் கூடுதல் பள்ளி கட்டிடம், சமூக நலக்கூடம் மற்றும் கால்வாய் புனரமைப்பு, மழைநீர் சேமிக்கும் வசதி ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நீட் எஸ்.எஸ் தேர்வில் மாநில ஒதுக்கீட்டு கலந்தாய்வின் 2வது சுற்றில் மாநில பணியில் உள்ள மருத்துவர்கள் விரும்பும் வகையில் இடங்களை தேர்வு செய்ய, மருத்துவ விண்ணப்பதாரர்களிடமிருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன. ஆனால், மாநில அளவில் கட்டாய 2ம் சுற்று கலந்தாய்வு நடத்தாமல், நிரப்பப்படாத பணியிடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்றுவது, தமிழ்நாடு அரசு பணியில் உள்ள மருத்துவர்கள் அவர்கள் விரும்பும் வகையில் இடங்களை தேர்வு செய்யவோ அல்லது மேற்கொண்டு கலந்தாய்வில் பங்கேற்கவோ அவர்களுக்கு உள்ள உரிமையை பறிக்கும் செயலாகும்.

மேலும், இது உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கு முரணானதாகும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டது. இந்தாண்டு 412 இடங்கள் உள்ளன. இதில் 50 சதவீதம் மாநில ஒதுக்கீட்டிற்கும், 50 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும் என வழங்கப்படுகிறது. இதற்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் முடிந்தது. இதில் 70 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களை 2வது சுற்று கலந்தாய்வு மூலம் விரும்பும் இடங்களை தேர்வு செய்ய முடியாத நிலை இருந்தது. இது மருத்துவர்களின் உரிமையை பறிக்கும் செயலாகும்.

மாநில ஒதுக்கீட்டின் கீழ், தமிழ்நாட்டில் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து 50 விழுக்காடு இடங்களும் தக்கவைக்கப்பட்டு, மாநில அளவிலான நீட் எஸ்.எஸ் கலந்தாய்வின் 2வது சுற்றில் கிடைக்கச் செய்வதை உறுதி செய்ய தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு உறுதி செய்யவேண்டும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறேன். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் அச்சப்பட தேவையில்லை.

வீரியம் குறைவாக உள்ள ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று. இதனால் லேசான சளி, காய்ச்சல் பாதிப்பு இருக்கும். 3, 4 நாட்களில் சரியாகிவிடும். அதேபோல முகக்கவசம் கட்டாயம் என்று அரசு அறிவுறுத்தவில்லை. இணை நோய் உள்ளவர்களும், கர்ப்பிணி தாய்மார்களும் முகக்கவசம் அணிந்தால் நல்லது என்றே கூறுகிறேன். தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி மக்களிடையே அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. இதனால் மக்கள் கொரோனா குறித்த அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post கொரோனா பாதிப்பால் அச்சப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma.Subramanian ,Chennai ,Tamil Nadu ,Kodambakkam ,
× RELATED தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது