×

ராமரின் தொன்மத்தை ஏற்றுக் கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்காதது என்ன நியாயம்? – கவிஞர் வைரமுத்து காட்டம்

சென்னை :ராமரின் தொன்மத்தை ஏற்றுக் கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்காதது என்ன நியாயம் என்று கவிஞர் வைரமுத்து காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

“ஒன்றிய அமைச்சர்
ஷெகாவத் அவர்கள்
கீழடித் தொன்மையை மெய்ப்பிக்க
இன்னும் அறிவியல் தரவுகள்
தேவையென்று சொல்லித்
தமிழர் பெருமைகளைத்
தள்ளி வைக்கிறார்

ஒரு தமிழ்க் குடிமகனாக
அமைச்சர் அவர்களுக்கு
எங்கள் அறிவின் வலியைப்
புலப்படுத்துகிறேன்

கீழடியின் தொன்மைக்கான
கரிமச் சோதனைகள்
இந்தியச் சோதனைச் சாலையில்
முடிவு செய்யப்பட்டவை அல்ல;
அமெரிக்காவில் ஃபுளோரிடாவின்
நடுநிலையான
சோதனைச் சாலையில்
சோதித்து முடிவறியப்பட்டவை

அதனினும் சிறந்த
அறிவியல் தரவு என்று
அமைச்சர் எதனைக் கருதுகிறார்?

சில தரவுகள்
அறிவியலின்பாற் பட்டவை;
சில தரவுகள்
நம்பிக்கையின்பாற் பட்டவை

ராமர் என்பது ஒரு தொன்மம்
அதற்கு அறிவியல்
ஆதாரங்கள் இல்லை;
நம்பிக்கையே அடிப்படை

கீழடியின் தொன்மை என்பதற்கு
அறிவியலே அடிப்படை

ராமரின் தொன்மத்தை
ஏற்றுக்கொண்டவர்கள்
கீழடியின் தொன்மையை
ஏற்றுக்கொள்ளாதது
என்ன நியாயம்?

தொன்மத்துக்கு ஒரு நீதி
தொன்மைக்கு ஒரு நீதியா?

தமிழர்களின் நெஞ்சம்
கொதிநிலையில் இருக்கிறது

தமிழ் இனத்தின் தொன்மையை
இந்தியாவின் தொன்மையென்று
கொண்டாடிக் கொள்வதிலும்
எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை

“தொன்று நிகழ்ந்த
தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம் எங்கள் தாய்”
என்ற பாரதியார் பாட்டு
எங்கள் முதல் சான்றாக முன்நிற்கிறது

மேலும் பல தரவுகள்
சொல்வதற்கு உள்ளன

விரிக்கின் பெருகுமென்று
அஞ்சி விடுக்கிறோம்

அங்கீகார அறிவிப்பை
விரைவில் வெளியிட வேண்டுகிறோம்” இவ்வாறு தெரிவித்தார்.

The post ராமரின் தொன்மத்தை ஏற்றுக் கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்காதது என்ன நியாயம்? – கவிஞர் வைரமுத்து காட்டம் appeared first on Dinakaran.

Tags : Rama ,Keezhadi ,Poet Vairamuthu Kattam ,Chennai ,X ,Union Minister ,Shekhawat ,Keezhadi… ,
× RELATED தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது