×

காவிரி டெல்டா பாசனத்திற்காக சேலம் மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் : மலர்தூவி நீரை வரவேற்றார்!!

மேட்​டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைத்தார். சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரியின் குறுக்கே 120 அடி உயரத்துடன் கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணை, தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கிறது.அணை முழுக் கொள்ளளவை எட்டும்போது, 93.47 டிஎம்சி நீர் தேங்கி இருக்கும். மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரைப் பயன்படுத்தி தஞ்சாவூர், நாகப்பட்டணம், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 17.15 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு உதவியாக, மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை 230 நாட்களுக்கு மொத்தம் 330 டிஎம்சி நீர் தேவைப்படும். அணையில் நீர் இருப்பை பொறுத்து, 12-ம் தேதிக்கு முன்போ, அல்லது காலதாமதமாகவோ அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க வேண்டுமானால் அணையில் குறைந்தபட்சம் 90 அடிக்கு நீர் இருந்தால் மட்டுமே சாகுபடிக்கு முழுமையாக நீர் திறக்க முடியும்.

இந்த நிலையில், நடப்பாண்டில் அணையின் நீர்மட்டம் 114 அடிக்கும் மேலாக இருந்ததால் காவிரி டெல்டா பாசனத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மேட்டூர் அணையை திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரை மலர்தூவி வரவேற்றார். முதற்கட்டமாக 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டு, படிப்படியாக 12,000 கன அடியாக உயர்த்தப்படும். மேட்டூர் அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில், உரிய காலத்தில் (ஜூன் 12-ம் தேதி) டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது இது 20-வது முறையாகும். மேலும், நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, ஜூன் 12-ம் தேதிக்கு முன்பு 11 முறை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு தள்ளிப்போனது 61 முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post காவிரி டெல்டா பாசனத்திற்காக சேலம் மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் : மலர்தூவி நீரை வரவேற்றார்!! appeared first on Dinakaran.

Tags : Salem Matur Dam ,Kaviri Delta ,K. Stalin ,Matur ,Caviri Delta ,Mattur Dam ,Khaviri ,Matur district ,Tamil Nadu ,Salem Matur ,Dam ,Kaviri ,Delta ,Mu. K. Stalin ,
× RELATED திருவண்ணாமலையில் சாலை விபத்தில்...