×

கொரோனா அதிகரிப்பதால் பிரதமர் மோடியை சந்திக்கும் முன் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம்

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டியுள்ள நிலையில், பிரதமர் மோடியைச் சந்திப்பவர்கள் கட்டாயமாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. டெல்லி முதல்வர் ரேகா குப்தா, டெல்லியைச் சேர்ந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட சுமார் 70 பாஜகவினர் மாலை பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளனர்.

இந்த சந்திப்பிற்கு முன்னதாக, அவர்கள் அனைவரும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக நாட்டின் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், ஒன்றிய சுகாதார அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 306 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று மட்டும் 66 புதிய பாதிப்புகள் பதிவானதை அடுத்து, அங்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 757 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கவும், ஆக்சிஜன், தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், வென்டிலேட்டர்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் இருப்பை உறுதி செய்யவும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. தொற்று பாதிப்புகள் அதிகரித்தாலும், மிகக் குறைந்த அளவிலானோருக்கே தீவிர உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவதால் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும், இருப்பினும் முன்னெச்சரிக்கை அவசியம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

The post கொரோனா அதிகரிப்பதால் பிரதமர் மோடியை சந்திக்கும் முன் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,New Delhi ,Modi ,Delhi ,Rekha Gupta ,
× RELATED உதய்பூரில் ரூ.30 கோடி மோசடி செய்த...