×

மணல் திருட்டுக்காக படுகை அணையின் ஷட்டர்களை உடைத்த சமூகவிரோத கும்பல்- பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

வில்லியனூர் : புதுச்சேரி மாநிலத்தின் துணை நகரமாக வில்லியனூர் விளங்கி வருகிறது. வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்டு 23 கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக சங்கராபரணி ஆறு இருந்து வருகிறது. இந்நிலையில் வில்லியனூர் பகுதியில் இருந்து உறுவையாறு, கரிக்கலாம்பாக்கம், பாகூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு சங்கராபரணி ஆற்றை கடந்து செல்ல வேண்டும். அப்போது தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்ததால் அதில் போக்குவரத்து சென்று வந்த நிலையில் மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் சென்றால் போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை இருந்து வந்தது. மேலும், ஆற்றில் செல்லும் தண்ணீர் நேரடியாக கடலுக்கு செல்வதால் உப்பு தண்ணீர் உட்புகுந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது. ஆகையால் 1998ம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜானகிராமன் மற்றும் அப்போதைய அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆகியோரின் தீவிர நடவடிக்கையால் வில்லியனூர்-ஆச்சார்யாபுரம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.12 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது. அப்போது பாலத்தின் கீழ்புறத்தில் தண்ணீர் தேக்கி வைப்பதற்கு 18 ஷட்டர்கள் கொண்ட படுகை அணை அமைக்கப்பட்டது. இப்பகுதியில் அன்று முதல் மழைக்காலங்களில் வரும் தண்ணீர் தேங்கி நிற்பதால் உப்பு நீர் உட்புகுவதை தடுத்து நிறுத்தி குடிநீர் பற்றாக்குறையின்றி இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு பலத்த கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வில்லியனூர்-ஆச்சார்யாபுரம் இடையில் கட்டப்பட்டுள்ள படுகை அணை நிரம்பி இயற்கை எழில் மிகுந்த கண்கொள்ளா காட்சியாக இருந்தது. முன்பெல்லாம் பருவமழை பெய்து அடுத்த பருவ மழை வரும் வரை படுகை அணையில் தண்ணீர் தேங்கி நிற்கும். ஆனால் தற்போது பருவ மழை பெய்து இரண்டு மாதங்கள்கூட ஆகாத நிலையில் படுகை அணையில் இருந்த தண்ணீர் அனைத்தும் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் எந்தகாலத்திலும் இல்லாத அளவிற்கு கோடி கணக்கில் விற்பனை செய்யும் அளவிற்கு ஆற்றில் மணல் அடித்து வந்துள்ளதால், அதை திருடுவதற்காக சில சமூகவிரோத கும்பல் படுகை அணையின் ஷட்டர்களை உடைத்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இதனை கண்காணிக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த ஷட்டரை சீரமைக்காமல் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். மேலும், இந்த படுகை அணையை பராமரிக்காமல் அப்படியே விட்டுள்ளதால் ஷட்டர்கள் பழுதடைந்துள்ளன. இதேநிலை தொடர்ந்தால் வருங்காலத்தில் இப்பகுதிகளில் உப்புநீர் உட்புகுந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உருவாகும். கடந்த காலங்களில் அணைகள் மற்றும் படுகை அணைகள் அமைக்கப்படாமல் இருந்தாலும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள படுகை அணைகளை பாதுகாக்க வேண்டும். மேலும் இந்த படுகை அணை மற்றும் ஷட்டர்களை சீரமைக்க வேண்டும். ஷட்டர்களை உடைத்து தண்ணீரை வெளியேற்றிய சமூகவிரோத கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post மணல் திருட்டுக்காக படுகை அணையின் ஷட்டர்களை உடைத்த சமூகவிரோத கும்பல்- பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? appeared first on Dinakaran.

Tags : Padukai Dam ,PWD ,Willianur ,Puducherry ,Willianur Commune Panchayat.… ,Public Works Department ,Dinakaran ,
× RELATED கேரளாவில் இருந்து வில்லியனூருக்கு...