×

தமாகா கட்சிக்காக பெறப்பட்ட நன்கொடை விவர அறிக்கையை ஏற்க கோரி ஜி.கே.வாசன் வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கட்சி நன்கொடை குறித்து தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஒவ்வொரு நிதியாண்டும் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு அறிக்கை தாக்கல் செய்தால் மட்டுமே அந்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு வழங்கப்படும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2018-2019, 2019- 2020 ஆகிய நிதியாண்டுகளில் நன்கொடை குறித்த அறிக்கை தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த இரு நிதியாண்டுகளுக்கும் வருமான வரிவிலக்கு வழங்க மறுத்த வருமான வரித்துறை முறையே 66.76 லட்சம் ரூபாயும், 1.07 கோடி ரூபாயும் செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன் காரணமாக 2018-19 மற்றும் 2019-20 நிதியாண்டுகளில் பெற்ற நன்கொடை குறித்து தாமதமாக அளித்த அறிக்கையை ஏற்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் சட்டப்படி தாமதத்தை ஏற்க முடியாது எனக்கூறி விண்ணப்பத்தை நிராகரித்து தேர்தல் ஆணையம் மே 13ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்து நன்கொடை குறித்த அறிக்கையை ஏற்க உத்தரவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 2018 -19 ம் ஆண்டு எந்த அலுவலகத்தில் இருந்து அறிக்கை தாக்கல் செய்வது என்ற குழப்பம் காரணமாக தாமதம் ஏற்பட்டது. 2019-20 ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தாமதம் ஏற்பட்டது. இரு ஆண்டும் முறையாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செந்தில்குமார் ராமமூர்த்தி, தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்தல் ஆணையம் இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 18ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

The post தமாகா கட்சிக்காக பெறப்பட்ட நன்கொடை விவர அறிக்கையை ஏற்க கோரி ஜி.கே.வாசன் வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : GK Vasan ,Tamaaga party ,Election Commission ,Chennai ,Madras High Court ,Tamil Nadu Congress Party ,High Court ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் கருப்பண்ணசாமி கோயிலில்...