×

திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 2 பேர் யார்?… எம்பி சீட் கேட்டு நெருக்கடியால், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவைக்கு 4 வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் 2 பேர் யார்? என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்திற்கு மொத்தமாக 18 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 6 உறுப்பினர்கள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவைக்கு அனுப்பப்படுகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் இருந்து 2019ம் ஆண்டு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வைகோ (மதிமுக), அன்புமணி ராமதாஸ் (பாமக), வில்சன் (திமுக), சண்முகம் (திமுக), அப்துல்லா (திமுக), சந்திரசேகர் (அதிமுக) ஆகியோரின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிகிறது.

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கான தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 34 உறுப்பினர்கள் தேவை. சட்டமன்ற பலம் அடிப்படையில் திமுக நான்கு உறுப்பினர்களையும், அதிமுக இரண்டு உறுப்பினர்களையும் தேர்வு செய்யலாம். அதனால் 6 உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படவே வாய்ப்புகள் உள்ளன. திமுக வேட்பாளர்களாக பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். அதேபோன்று, ஏற்கனவே ஒப்பந்தம் செய்தபடி திமுக கூட்டணியில் மநீம வேட்பாளராக கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அதிமுகவின் இரண்டு இடங்களில் யாரை வேட்பாளராக நிறுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார், “மாநிலங்களவை தேர்தல் குறித்து அறிவிப்பு வந்துள்ளது. திமுக தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் பாகக் கிளைகளை அமைப்பது குறித்தும், 234 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 68,000 கிளைக் கழகங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (29ம் தேதி) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த கூட்டத்தில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர் தொடர்பாகவும் ஆலோசனை நடத்த உள்ளனர். அந்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு நல்ல செய்தி வரலாம்” என்று தெரிவித்தார்.

அதன்படி, இன்று காலை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக முன்னணி தலைவர்கள் இன்று கூடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த கூட்டத்தில், அதிமுக சார்பில் போட்டியிடும் 2 எம்பிக்கள் பெயர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி, அதிமுகவில் ஒரு மாநிலங்களவை சீட் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஒதுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ குரலாகவே ஊடகங்களில் ஜெயக்குமார் பேசி வருகிறார். ஆகவே, அவருக்கு சீட் அளிக்கப்படலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அதே சமயம் முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, செம்மலை ஆகியோரும் மாநிலங்களவை சீட் கேட்டு காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க அதிமுகவிடம் ராஜ்யசபா சீட் கேட்டு தேமுதிக நெருக்கடி கொடுத்து வருகிறது.

மக்களவை தேர்தலின்போது ராஜ்யசபா சீட் ஒப்பந்தம் போடப்பட்டது என்று தொடர்ந்து பேசி வந்த பிரேமலதா, பொறுத்திருந்து பார்ப்போம் என்று நேற்று முன்தினம் பேட்டியளித்துள்ளார். ஆனால், அதிமுக தரப்பில் இருந்து எவ்வித சாதகமான பதிலும் இதுவரை சொல்லப்படவில்லை. தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கப்படாது என்றே அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அப்படியே தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படவில்லை என்றால், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. தென் மாவட்டங்களில் செல்வாக்காக உள்ள சாதியினரும் சீட் கேட்டு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் என்ன முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளனர். ஆனால் முடிவு எடுக்க முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி திணறி வருகிறார் என்றுகூறப்படுகிறது.

The post திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 2 பேர் யார்?… எம்பி சீட் கேட்டு நெருக்கடியால், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Edappadi Palanisami ,Chennai ,Dimuka ,Tamil Nadu ,Adimuka ,Dima ,Dinakaran ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...