×

பேராவூரணியில் பரிதாபம் லாரி சக்கரத்தில் சிக்கி மாணவன் உள்பட 2 பேர் பலி

பேராவூரணி : பேராவூரணி அரசு மருத்துவமனை அருகே சந்தைக்கு பொருட்கள் வாங்க பைக்கில் வந்த 2 பேர் லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார்கள்.புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா மேற்பனைக்காடு அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவ ரெத்தினம் என்பவரின் மகன் சிவராமன்(29). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே ஊரில் இ சேவை மையம் நடத்தி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான ராஜசேகரன் என்பவர் மகனும், ஆயிங்குடி அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவன் அறிவுக்கரசு(11) என்பவருடன், பேராவூரணி சந்தைக்கு வந்து பொருட்கள் வாங்க வந்துள்ளார்.

பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் அரசு மருத்துவமனை அருகே சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது சாலையின் மறுபுறத்தில் தூத்துக்குடியில் இருந்து உர மூட்டைகளை ஏற்றி வந்து பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சியில் இறக்கி விட்டு, ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியின் பக்கவாட்டில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி சப் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் இருவரது உடலையும் மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இறந்தவர்களது உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதது காண்பவர்களை கண்கலங்க வைத்தது. சந்தைக்கு பொருட்கள் வாங்க வந்த இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post பேராவூரணியில் பரிதாபம் லாரி சக்கரத்தில் சிக்கி மாணவன் உள்பட 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Peravoorani ,Peravoorani Government Hospital ,Sivaraman ,Rethinam ,Balakrishnapuram ,Merepanaikadu ,Aranthangi taluka ,Pudukkottai district ,
× RELATED ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு கடலூர்...