×

ஜெனீவா ஓபன் டென்னிஸ்; சாம்பியன் நுாறு…ஜோகோவிச் ஜோரு: பைனலில் வீழ்ந்த போலந்து வீரர்

ஜெனீவா: ஜெனீவா ஓபன் டென்னிஸ் ஒற்றையர் இறுதிப் போட்டியில், செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் (38) அபார வெற்றி பெற்று, 100வது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஜெனீவா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன. அரை இறுதிப் போட்டியில் பிரிட்டன் வீரர் கேமரோன் நோரீயை எதிர்கொண்ட உலகின் 6ம் நிலை வீரரும், செர்பியாவை சேர்ந்த ஜாம்பவானுமான நோவக் ஜோகோவிச், சளைக்காமல் போராடி வென்றார். அதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அவர், போலந்து வீரர் ஹியுபர்ட் ஹர்காக்ஸ் (28), உடன் மோதினார்.

அபாரமாக ஆடிய ஹியுபர்ட், முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். அடுத்த செட்டில் இருவரும் கடுமையாக போராடியதால் டை பிரேக்கர் வரை அந்த செட் நீண்டது. பின், 7-6 (7-2) என்ற புள்ளிக் கணக்கில் அதை ஜோகோவிச் வசப்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக நடந்த 3வது செட்டும் டை பிரேக்கர் வரை சென்றது.
கடைசியில் அந்த செட்டை 7-6 (7-2) என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்திய ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார். இது, ஏடிபி டென்னிஸ் போட்டிகளில் ஜோகோவிச் கைப்பற்றும் 100வது பட்டமாகும். இதற்கு முன், அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ் (109 பட்டம்), சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (103 பட்டம்) ஆகியோர் 100 பட்டங்களுக்கு மேல் வென்று சாதனை படைத்துள்ளனர்.

அந்த மகத்தான சாதனைப் பட்டியலில் 3வது வீரராக ஜோகோவிச் தற்போது இணைந்துள்ளார். கடந்த ஆண்டு பாரிசில் நடந்த ஒலிம்பிக் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச், அதற்கு பின் தற்போதுதான் மீண்டும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். சமீப காலமாக, பல போட்டிகளில் முதல் அல்லது 2வது சுற்றுகளில் தோல்வியடைந்து வெளியேறி வந்த ஜோகோவிச், அதற்கு முற்றுப்புள்ளி வைத்து 38 வயதிலும் தன் அபார திறமையை உலகுக்கு பறை சாற்றியுள்ளார்.

 

The post ஜெனீவா ஓபன் டென்னிஸ்; சாம்பியன் நுாறு…ஜோகோவிச் ஜோரு: பைனலில் வீழ்ந்த போலந்து வீரர் appeared first on Dinakaran.

Tags : Geneva Open Tennis ,Joru ,Geneva ,Novak Djokovic ,Geneva, Switzerland.… ,Dinakaran ,
× RELATED பிட்ஸ்