×

இளம் பெண்ணுடன் தொடர்பு மூத்த மகன் தேஜ் பிரதாப் கட்சியில் இருந்து நீக்கம்: குடும்பத்தில் இருந்தும் தள்ளி வைத்து லாலு பிரசாத் நடவடிக்கை

பாட்னா: ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தின் மூத்த மகனும் முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் கடந்த 2018ம் ஆண்டு முன்னாள் முதல்வர் தரோகா பிரசாத் ராயின் பேத்தி ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்தார். ஐந்தே மாதங்களில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர். இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. தேஜ் பிரதாப் நேற்று முன்தினம் தனது சமூகவலைதள பதிவில்,நான் தேஜ் பிரதாப் யாதவ். புகைப்படத்தில் என்னுடன் இருப்பவர் அனுஷ்கா யாதவ், நாங்கள் 12 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தோம். தற்போதும் தொடர்பில் உள்ளோம் என்று குறிப்பிட்டிருந்தார். அவருடைய இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பிறகு தனது பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,தனிப்பட்ட வாழ்க்கையில் தார்மீக மதிப்புகளை புறக்கணிப்பது சமூக நீதிக்கான கட்சியின் கூட்டு போராட்டத்தை பலவீனப்படுத்துகிறது. தேஜ் பிரதாப்பின் நடத்தை குடும்ப மதிப்புகள், மரபுகளுக்கு ஏற்ப இல்லை. தேஜ் பிரதாப்பின் நடவடிக்கை என்னுடைய குடும்ப மதிப்புகளுக்கு ஏற்புடையதாக இல்லை. இனி மேல் அவருக்கு கட்சியிலும் குடும்பத்திலும் எந்த பங்கும் இருக்காது. கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு அவர் நீக்கப்படுகிறார் என குறிப்பிட்டுள்ளார். இது பற்றி பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், என்னுடைய அண்ணன் தேஜ் பிரதாப் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுக்க அவருக்கு உரிமை உள்ளது. ஆனால் சில விஷயங்களை சகித்து கொள்ள முடியாது என்றார்.

 

The post இளம் பெண்ணுடன் தொடர்பு மூத்த மகன் தேஜ் பிரதாப் கட்சியில் இருந்து நீக்கம்: குடும்பத்தில் இருந்தும் தள்ளி வைத்து லாலு பிரசாத் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tej Pratap ,Lalu Prasad ,Patna ,RJD ,minister ,Tej Pratap Yadav ,Aishwarya Rai ,Chief Minister ,Darokha Prasad Rai ,
× RELATED பஞ்சாப் ஆளும் ஆம்ஆத்மியில் பரபரப்பு;...