×

நெல்லை மாவட்டத்தில் 248 தனியார் பள்ளிகளில் எல்கேஜி முதல் 9ம் வகுப்பு வரையிலான தேர்வு முடிவை மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு

தியாகராஜநகர் : நெல்லை மாவட்டத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் எல்கேஜி முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் தேர்வு முடிவுகள் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். நெல்லை மாவட்டத்தில் கடந்த 2024-25ம் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் பயின்ற மாணவர்களின் ஆண்டு இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் எல்கேஜி முதல் 9ம் வகுப்பு வரை பயின்ற மாணவ, மாணவிகளின் தேர்வு முடிவுகளை முதன்மைக்கல்வி அலுவலர் சிவகுமார் ஆலோசனைப்படி தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் தேவிகா ராணி பரிசீலனை செய்து வெளியிட அனுமதித்து வருகிறார்.

மாவட்டத்தில் உள்ள 248 மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் எல்கேஜி முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் எழுதிய தேர்வு முடிவுகள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வள்ளியூர், சேரன்மகாதேவி வட்டார பள்ளிகளின் ஆய்வுகள் முடிக்கப்பட்டன.

இதைதொடர்ந்து நெல்லை கல்வி மாவட்ட அளவில் 135 பள்ளிகளின் தேர்வு முடிவுகளை டிஇஒ (தனியார் பள்ளிகள்) நேற்று பாளை ஜெயேந்திரா பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். தனியார் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் குழுவினர் எடுத்து வந்திருந்த மாணவர்களின் அனைத்து வகையான கோப்புகளையும் ஆய்வு செய்து பின்னர் ரிசல்ட் வெளியிட அனுமதி வழங்கப்பட்டது. பள்ளிகளுக்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலக அலுவலர்களும் பங்கேற்று ஆய்வு பணிக்கு உதவினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தேர்வு முடிவுகளை உடனடியாக மாணவர்களிடம் தெரிவிக்க பள்ளிகளின் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.

The post நெல்லை மாவட்டத்தில் 248 தனியார் பள்ளிகளில் எல்கேஜி முதல் 9ம் வகுப்பு வரையிலான தேர்வு முடிவை மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : LKG ,Nellai ,Thiagarajanagar ,Education ,Nellai district ,District Education Officer ,Dinakaran ,
× RELATED இலங்கை சிறையில் இருந்து விடுதலை...