×

நயினார்குளம் மார்க்கெட்டில் இருந்து வெளியேற தயக்கம் காட்டும் வியாபாரிகள் தயார் நிலையில் பழைய பேட்டை மொத்த விற்பனை சந்தை

*கடைகளை சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள்

நெல்லை : பழைய பேட்டையில் உள்ள நெல்லை மாநகராட்சி மொத்த விற்பனை சந்தை மற்றும் வாகன முனையம் சுத்தம் செய்யப்பட்டு தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நயினார்குளம் மார்க்கெட்டில் இருந்து வியாபாரிகள் வெளியேற தயக்கம் காட்டி வருகின்றனர். மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்களோடு வியாபாரிகள் சங்கம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட் பழம்பெருமை வாய்ந்த மார்க்கெட்டாகும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் இம்மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வந்து இறங்குகின்றன.

உள்ளூர் தேவைகளை தீர்ப்பது மட்டுமின்றி, கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கும் நயினார்குளம் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் நயினார்குளம் கீழக்கரை ரோட்டில், சாலை மற்றும் பாதாளசாக்கடை அமைக்கும் பணி சுமார் 6 மாத காலத்திற்கு நடைபெற உள்ளதாக நெல்லை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

எனவே அந்த சாலையை போக்குவரத்திற்கும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் பயன்படுத்த இயலாது என்பதால், நயினார்குளம் நெல்லை காய்கறி மார்கெட்டுக்கு வரும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வியாபாரத்திற்கும் பயன்பாட்டிற்கும் வரும் கனரக வாகனங்கள், மினி லாரிகள் பழையபேட்டையில் உள்ள வாகன முனையத்திற்கு செல்ல மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

மேலும் உரிய நடைமுறைகளை பின்பற்றி பழைய பேட்டையில் உள்ள நெல்லை மாநகராட்சி மொத்த விற்பனை சந்தை கடைகளை, மொத்த காய்கறி விற்பனைக்கு, வியாபாரிகளும், விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ளவும் கேட்டு கொள்ளப்பட்டது.

இதற்காக நெல்ைல கலெக்டர் சுகுமார் மற்றும் மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா ஆகியோர் பழைய பேட்டை வாகன முனையத்திற்கு சென்று களஆய்வும் நடத்தினர்.

இந்நிலையில் நேற்று காலை முதலே மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பழைய பேட்டையில் உள்ள மொத்த விற்பனை சந்தையில் உள்ள கடைகளை சுத்தம் செய்து, அவற்றை மெருகேற்றினர். வாகன முனையத்தையும் தயார் நிலையில் வைத்தனர்.

இந்நிலையில் நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட் வியாபாரிகள் அங்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். தங்களுக்குரிய சொந்த இடத்தை விட்டு அங்கு வாடகைக்கு செல்வது வியாபாரிகள் பலரும் யோசிப்பதாக கூறப்படுகிறது.

இதற்காக வியாபாரிகள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தீர்க்கமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. லாரிகளை மட்டுமே பழைய பேட்டை கனரக வாகன முனையத்தில் நிறுத்தினால், அங்கிருந்து மூடைகளை எடுத்து வருவதில் உள்ள சிரமங்கள் குறித்தும் யோசிக்கப்பட்டது.

மாநகராட்சிக்கு வெளியே புறநகர் பகுதியில் நயினார்குளம் மார்க்கெட்டுக்கு சொந்தமான இடத்திற்கு மார்க்கெட்டை கொண்டு செல்வது குறித்தும் கூட்டத்தில் யோசிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்று மாலையில் நயினார்குளம் வியாபாரிகள் சங்கத்தினர் நெல்லை கலெக்டரை சந்தித்து தங்கள் பிரச்னைக்கு சுமூக தீர்வை எட்டுமாறு கேட்டு கொண்டனர்.

பழைய பேட்டைக்கு செல்ல வியாபாரிகள் தயக்கம் காட்டும் நிலையில், நயினார்குளம் சாலையை மூடுவது குறித்து மாநகராட்சி அதிகாரிகளும் யோசித்து வருகின்றனர். விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நயினார்குளம் மார்க்கெட்டில் இருந்து வெளியேற தயக்கம் காட்டும் வியாபாரிகள் தயார் நிலையில் பழைய பேட்டை மொத்த விற்பனை சந்தை appeared first on Dinakaran.

Tags : Nainarkulam market ,Old ,Pettai ,Nellai ,Nellai Corporation ,Market ,Terminal ,Old Pettai ,Nainarkulam market… ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்...