×

போக்சோ வழக்கில் கைதான மதபோதகர் ஜான் ஜெபராஜுக்கு ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன்

சென்னை: போக்சோ வழக்கில் சிறையில் உள்ள கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிறிஸ்தவ மத பாடல்கள் மூலம் சமூகவலைதளத்தில் மிகவும் பிரபலமான மதபோதகராக இருப்பவர் ஜான் ஜெபராஜ். இவர் கோவையில் கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடம் என்ற அமைப்பை நிறுவி அதில் மதபோதகராகவும் செயல்பட்டு வருகிறார். கடந்த 2024ம் ஆண்டு மே 21ம் தேதி மத போதகர் ஜான் ஜெபராஜ், கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 2 சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஜான் ஜெபராஜ் மீது கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த ஜான் ஜெபராஜ் கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி கேரள மாநிலம் மூணாறில் உள்ள விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் கோரி அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், நானும் என் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். என் மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர் தூண்டுதலின் பெயரில் சிறுமிகளை வைத்து தனக்கெதிராக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனக்கு எதிராக உள் நோக்கத்துடன் பொய்யான புகாரில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல மாட்டேன் என்று கோரியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜான் ஜெபராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.மாளவியா, குடும்பப் பிரச்னை காரணமாகவே இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. குடும்ப பிரச்சினை மற்றும் புகார் அளித்தவர் ஆகியோர் பிண்னணி குறித்து நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதரார் ஜான் ஜெபராஜ்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இரு நபர் ஜாமீன் உத்தரவாதம் அளிக்க வேண்டும். விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையொப்பம் இட வேண்டும் என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.

The post போக்சோ வழக்கில் கைதான மதபோதகர் ஜான் ஜெபராஜுக்கு ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : High Court ,John Jebaraj ,POCSO ,Chennai ,Madras High Court ,Coimbatore… ,
× RELATED மருதநல்லூரில் டெலிவரி நிறுவன ஊழியர்...