×

குற்றாலம் விடுதியில் பயங்கரம்: மாவு மில் உரிமையாளர் கத்தியால் குத்திப்படுகொலை

 

தென்காசி: குற்றாலத்தில் விடுதியில் தங்கியிருந்த நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மாவு மில் உரிமையாளர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நண்பர்கள் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் பேருந்து நிலையம் எதிரில் வடபுறம் அமைந்துள்ள பராசக்தி நகர் பகுதியில் விடுதியாக செயல்படும் வீட்டில் இன்று அதிகாலை வீரவநல்லூரை சேர்ந்த போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் 48 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். அதே வீட்டின் மற்றொரு அறையில் அவருடன் வந்த நண்பர்கள் 3 பேர் இருந்தனர். அவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.‌

இந்த திடுக்கிடும் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் மேலபுதுக்குடி ரங்கசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராம்குமார் (48). மாவு மில் உரிமையாளர். இவரது மாவு மில்லுக்கு எதிரில் வீரவநல்லூர் வடக்கு தெருவைச் சேர்ந்த கௌதம் என்பவர் டெய்லர் கடை நடத்தி வந்துள்ளார். ராம்குமார் அடிக்கடி கௌதமை கிண்டல் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் அவரை பழிவாங்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கௌதம் அவரது நண்பர்களான கோழிக்கடை உரிமையாளர் மணிகண்டன் மற்றும் முஹம்மது ஆசிக் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மணிகண்டன் தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள அவரது நண்பர் ஒருவரிடம் குற்றாலம் செல்வதற்கு கார் வேண்டும் என்று கேட்டுள்ளார். அந்த நண்பரும் ஒரு டிரைவருடன் காரை வீரவநல்லூருக்கு அனுப்பி வைத்துள்ளார். நேற்று இரவு நண்பர்கள் 4 பேரும் அந்த காரில் ஏறி நள்ளிரவில் குற்றாலத்திற்கு வந்துள்ளனர். அங்கு வாடகைக்கு விடப்படும் வீடு ஒன்றில் அறைகளை எடுத்து தங்கி உள்ளனர். அங்கு வைத்து ராம்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதற்கிடையே ராம்குமாரை கௌதம் அழைத்துச் சென்றதை அறிந்த அவரது மனைவி உஷாராணி மற்றும் உறவினர்கள் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து போலீசார் அவர்களது மொபைல் எண்ணை வைத்து ட்ராக் செய்து குற்றாலத்தில் அவர்கள் தங்கி இருந்த விடுதியில் வந்து பார்த்தபோது ஒரு அறையில் ராம்குமார் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பிணமாகவும் மற்றொரு அறையில் கௌதம், மணிகண்டன், ஆசிக் ஆகியோர் இருந்ததை பார்த்து அவர்கள் மூவரையும் பிடித்து விசாரித்த போது கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : Tenkasi ,
× RELATED 15 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது