×

திருவாடானை தேரோடும் வீதியில் புதைவட மின்கம்பி அமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருவாடானை,மே 13: திருவாடானையில் தேரோடும் நான்கு வீதிகளிலும் புதைவட மின்கம்பி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானையில் மிகவும் பழமையான ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் பாண்டி ஸ்தலம் 14ல் எட்டாவது சிவஸ்தலம். திருநாவுக்கரசர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும்.

இக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மற்றும் ஆடிப்பூரத் திருவிழா ஆகிய இரண்டு திருவிழாக்கள் நடைபெறும். இந்த இரண்டு திருவிழாக்களிலும் இரண்டு தேரில் நான்கு ரத வீதிகளிலும் வீதி உலா நடைபெறும். இதில் வைகாசி விசாகத் திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுப்பார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தேரோட்டத்தின் போது நான்கு ரத வீதிகளிலும் மின் தடை செய்யப்பட்டு அனைத்து மின்கம்பிகளும் அகற்றப்பட்டு அன்றைய நாள் முழுவதும் மின்சாரம் தடை செய்யப்படும். இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே அரசு இதுபோன்று முக்கிய கோயில்களில் புதைவட மின்கம்பி தேரோடும் வீதிகளில் அமைக்க உத்தரவிட்டு செயல்படுத்தி வருகிறது. அதேபோன்று இந்த கோயிலிலும் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், மிகவும் முக்கியமான இக்கோயிலில் வருடத்துக்கு இரண்டு முறை தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தின் போது நாள் முழுவதும் மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக காலையில் 10 மணிக்கு துவங்கும் தேரோட்டம் மாலை ஆறு மணி வரை நடைபெறும். அதுவரை மின்தடை செய்யப்படுகிறது. தேரோட்டம் முடிந்து மின்விநியோகம் செய்ய பல மணி நேரம் ஆகிறது.

எனவே மின்வாரியம் இந்த நான்கு ரத வீதிகளிலும் பூமிக்கு அடியில் புதைவட மின்கம்பி அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு வைகாசி விசாகத் திருவிழாவின் தேரோட்டம் விரைவில் நடைபெற உள்ளது. எனவே சிறப்பு பணியாக வருகிற தேரோட்டத்திற்கு முன்பு இந்த பணியை செய்து முடிக்க வேண்டும் என்றனர்.

The post திருவாடானை தேரோடும் வீதியில் புதைவட மின்கம்பி அமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai Therodum Road ,Thiruvadanai ,Adhirethineswarar ,Thirunavukkarasar ,Appar ,Sundarar ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...