×

திருமங்கலத்தில் ரூ.5.50 கோடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணிகள் தீவிரம்: 6 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும்

திருமங்கலம், மே 13: ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் திருமங்கலம் அருகே உச்சப்பட்டியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் 38 கிராம பஞ்சாயத்துகளை கொண்டது. இதன் அலுவலகம் தற்போது திருமங்கலம் விமான நிலையம் ரோட்டில் தேவர் சிலை அருகே அமைந்துள்ளது. இந்த ரோட்டில் உருவாகும் புதிய ரயில்வே மேம்பால பணிகளுக்காக, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்புற பகுதிகள் இடிக்கப்படுகின்றன. மேலும் இப்பகுதியில் சர்வீஸ்ரோடு வருவதால் அலுவலகத்தினை இடமாற்றம் செய்ய வேண்டிய நிலை உருவானது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவான இக்கட்டிடம், ஏற்கனவே இட நெருக்கடியில் செயல்பட்டு வந்தது.

இதனால் திருமங்கலம் – மதுரை நான்கு வழிச்சாலையில் திருமங்கலம் கோட்டாச்சியர் அலுவலகம் அருகே இடம் ஒதுக்கப்பட்டு ஓராண்டிற்கு முன்பு புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான கட்டுமான பணிகள் துவங்கியது. ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் இரண்டு அடுக்குகளாக இந்த அலுவலகம் உருவாகி வருகிறது. மதுரை மாவட்டத்தில் ம முதல்முறையாக இந்த அலுவலகத்தில் லிப்ட் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறைகள், பொறியாளர் பிரிவு, தேசிய ஊரகவளர்ச்சித்திட்ட பிரிவு, அலுவல பிரிவு, ஊராட்சி ஒன்றிய தலைவர் அறை, கவுன்சில் ஹால், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைகிறது.

கட்டிட பணிகள் விரைவாக நடைபெறும் நிலையில், மின் வசதி, குளிர்சாதன வசதி, வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட உள்ளன. இதன்படி 6 மாத காலத்திற்குள்பணிகளை முடித்து புதிய கட்டிடத்திற்கு திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இடம் மாற்றப்படும் என அதிகாரிகள் தொிவித்தனர். திருமங்கலம் நகரில் தாலுகா அலுவலகம் அருகே இயங்கி வந்ததால் பொதுமக்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் அனைவரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு எளிதில் சென்று வரமுடிந்தது.

தற்போது திருமங்கலம் நகரில் இருந்து சுமார் 4 கி.மீ தூரத்திற்கு அப்பால் திருமங்கலம் ஒன்றியத்தின் முதல் கிராமமான உச்சப்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. மதிப்பனூர், தங்களாசேரி, பொக்கம்பட்டி உள்ளிட்ட 30 கி.மீ தூரமுள்ள பகுதிகளில் இருந்து இங்கு பொதுமக்கள் வந்து செல்வதில் பெறும் இடையூறு ஏற்படும். மேலும் உச்சப்பட்டி, கப்பலூர் பஞ்சாயத்தினை தவிர்த்து மீதமள்ள 36 பஞ்சாயத்துகளை சேர்ந்தவர்கள் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கப்பலூர் டோல்கேட்டினை கடந்து செல்லவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post திருமங்கலத்தில் ரூ.5.50 கோடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணிகள் தீவிரம்: 6 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் appeared first on Dinakaran.

Tags : Panchayat Union ,Thirumangalam ,Uchchapatti ,Thirumangalam Panchayat Union ,Thirumangalam Vimana… ,
× RELATED காந்தி சிலை ரவுண்டானா பகுதியில்...