திண்டுக்கல், மே 13: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சரவணன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து 196 மனுக்கள் பெற்றார். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், கூட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 600க்கு 550க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் துாய்மைக் காவலர்களின் குழந்தைகளான திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜிவ ஜோதி 581 மதிப்பெண், திண்டுக்கல் மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மணி 550 மதிப்பெண் ஆகியோருக்கும், மாற்றுத்திறனாளி பார்வையற்றோர் பிரிவில் 535 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவன் சிவரஞ்சன் ஆகியோருக்கு கலெக்டர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
மேலும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கிடும் வகையில் வன்னியபாறைப்பட்டியைச் சேர்ந்த மங்களம் என்பவருக்கு பணி ஆணையை வழங்கினார்.செற்கை நுண்ணறிவிற்கே சூளுரைக்கும் இயற்கை நுண்ணறிவாளன் எனும் பட்டம் பெற்று சோழன் புக் ஆப் வேர்ல்டு ரிகார்ட்ஸ் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடித்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 6ம் வகுப்பு மாணவர் அபினவ் பிரத்யூஷ்க்கு கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார்.கூட்டத்தில், டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் 196 மனுக்கள் ஏற்பு appeared first on Dinakaran.
