×

சிறப்பு ரயில்கள் போதுமானதாக இல்லை அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: பஸ் நிலையத்திலும் பரிதவிப்பு திருவண்ணாமலை ரயில் நிலையத்தில்

திருவண்ணாமலை, மே 13: திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய, ரயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல், பஸ் நிலையங்களிலும் நீண்ட நேரம் பக்தர்கள் தவித்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் ேகாயிலில் சித்ரா பவுர்ணமி விழா கடந்த இரண்டு நாட்களாக விமரிசையாக நடந்தது. கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் இரவு 8.47 மணிக்கு தொடங்கி, நேற்று இரவு 10.43 மணிக்கு நிறைவடைந்தது. எனவே, நேற்று முன்தினம் அதிகாலை தொடங்கி, நேற்று இரவு முழுவதும் விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்றனர். அதனால், கிரிவலப்பாதையின் 14 கிமீ தொலைவும் பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.

கிரிவலப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்ல முடியாமல், கூட்டத்துடன் கூட்டமாக நகர்ந்து செல்லும் நிலை காணப்பட்டது. இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், சித்ரா பவுர்ணமிக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களிலும், சிறப்பு பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 4533 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனாலும், நேற்று காலை 11 மணிக்கு பிறகு சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது.

அதனால், திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் வழியாக சென்னைக்கு போதுமான பஸ்கள் இல்லாமல், மார்க்கெட் கமிட்டி தற்காலிக பஸ் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அதனால், அங்கிருந்த போலீசாரிடம் பக்தர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மறியலில் ஈடுபடவும் முயற்சித்தனர். அதைத்தொடர்ந்து, வேறு வழித்தடங்களில் இருந்து பஸ்கள் திருப்பிவிடப்பட்டு, சென்னைக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல், திருவண்ணாமலை – செங்கம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பெங்களூரு செல்லும் சிறப்பு பஸ்கள் சாலையில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், திருவண்ணாமலைக்கு நேற்று சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனாலும், அவை போதுமானதாக இல்லை. அதனால், ரயில்களில் கூட்டம் அலைமோதியது. ரயில் நிலையத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஒரே நேரத்தில் ரயிலில் ஏற முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரயில் பெட்டிகள் அனைத்தும் நிற்கவும் இடமின்றி கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் ரயிலில் ஏற முடியாமல் திணறினர். பெரும்பாலானோர் ரயிலில் ஏற முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். எனவே, இனிவரும் பவுர்ணமி நாட்களில், கூடுதலான சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post சிறப்பு ரயில்கள் போதுமானதாக இல்லை அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: பஸ் நிலையத்திலும் பரிதவிப்பு திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai railway ,Tiruvannamalai ,Chitra Pournami festival ,Annamalaiyar temple ,Tiruvannamalai railway station ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ...