- பா.ம.க. மாநாடு
- அன்புமணி
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பா.ம.க.
- சித்திரை பௌர்ணமி வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு
- மாமல்லபுரத்தில்
சென்னை: தமிழக அரசியல் களத்தில் பாமக மாநாடு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அன்புமணி கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு வெற்றிகரமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதை சாத்தியமாக்கிய அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது உளமார்ந்த நன்றி. மாமல்லபுரம் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும், மாநாட்டுக் குழுத் தலைவராக என்னை நியமித்ததற்காகவும், மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்ததற்காகவும் நிறுவனர் ராமதாசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
களத்தில் மாநாட்டுப் பணிகளை சிறப்பாக ஒருங்கிணைத்து, கடந்த 20 நாள்களாக இரவு, பகல் பாராமல் உழைத்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மற்றும் அவருக்குத் துணையாக களத்தில் நின்று பணியாற்றிய முன்னாள் எம்எல்ஏக்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், சேலம் கார்த்தி மற்றும் வைத்தி, செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை உள்ளிட்ட அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பாமகவினர், வன்னியர் சங்கம் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் அலை அலையாய் திரண்டு வந்து மாநாட்டைச் சிறப்பித்த அனைவருக்கும் எனது கோடானுகோடி நன்றிகள்.
தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் இந்த மாநாடு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் சமூக, கல்வி, வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்கான முழக்கங்கள் இந்த மாநாட்டில் எழுப்பப்பட்டுள்ளன. ஏழரை கோடி மக்களின் இந்த உணர்வுகளை தமிழக அரசு புரிந்து கொண்டு அதனடிப்படையில் உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த ஆணையிட வேண்டும். அதனடிப்படையில் தமிழ்நாட்டில் 69%இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதுடன், வன்னியர்களுக்கும், மற்ற அனைத்து சமுதாயங்களுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். பட்டியலின மக்களுக்கு இப்போது வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டின் அளவை மேலும் 2 % உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* குப்பைகளை அகற்றிய அன்புமணி
மாமல்லபுரம் அருகே, திருவிடந்தையில் நடைபெற்ற பாமக மாநாட்டில் கலந்துகொண்ட கட்சியினர், தொண்டர்கள் மாநாட்டு வளாகத்தில் வீசி சென்ற குப்பைகளை கட்சியினருடன் சேர்ந்து பாமக தலைவர் அன்புமணி சுத்தம் செய்தார்.
மாநாட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்கள் காலி தண்ணீர் பாட்டில்கள், ஸ்நாக்ஸ் கவர்கள், சாப்பாடு கொண்டு வந்த அட்டை பெட்டிகள் உள்ளிட்ட குப்பைகளை ஆங்காங்கே வீசி விட்டு சென்றனர். இதனால், மாநாடு நடைபெற்ற வளாகம் அலங்கோலமாக காணப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகம், மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி, வழக்கறிஞர் பாலு, மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை, திருப்போரூர் ஒன்றிய செயலாளர் தனுசு, திருப்போரூர் ஒன்றிய கவுன்சிலர் தட்சணாமூர்த்தி, மாமல்லபுரம் நகர செயலாளர் ராஜசேகரன், மாவட்ட அமைப்பு செயலாளர் வாசு உள்ளிட்ட கட்சியினருடன் பாமக தலைவர் அன்புமணி மாநாடு நடந்த இடத்திற்கு நேரில் வந்தார். தொடர்ந்து, மாநாட்டு வளாகத்தில் கட்சியினர் கண் மூடித்தனமாக வீசி சென்ற குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார்.
The post மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பாமக மாநாடு மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தர வேண்டும்: அன்புமணி அறிக்கை appeared first on Dinakaran.
