×

பல ஆண்டுகளாக வேலை செய்தும் செயலாளர் பதவி தர மறுப்பு; பனையூரில் விஜய் காரை மறித்த தவெக பெண் நிர்வாகியால் பரபரப்பு

 

சென்னை: பல ஆண்டுகளாக களப்பணியாற்றினாலும், தவெக வின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக நியமிக்க மறுத்ததால், தன்னை நியமிக்கக் கோரி சென்னை பனையூர் கட்சி அலுவலகத்தில் அஜிதா ஆர்க்னஸ் தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டு வருகிறார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகத்தை தொடங்குவதற்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை ‘விஜய் மக்கள் இயக்கமாக’ நடத்தி வந்தார்.

அதில் திமுகவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ள பில்லா ஜெகன் என்ற ஜெகன், அவரது அண்ணன் சுமன் ஆகியோர் பொறுப்பில் இருந்தனர். அவர்கள் 2 பேரும் விஜய் படம் ரிலீசாகும் போது தோரணம் கட்டுவது, ரசிகர்களை முதல் காட்சிக்கு திரட்டுவது மற்றும் மன்றத்தின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது என்று பணியில் ஈடுபட்டனர். நடிகர் விஜய் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்சி தொடங்கியதும், அவர்கள் ஏற்கனவே திமுகவில் இருப்பதால் ரசிகர் மன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகிக் கொண்டனர். இதையடுத்து, பில்லா ஜெகனின் தங்கை அஜிதா ஆர்க்னஸ் என்பவர், தவெக வில் தீவிரமாக பணியாற்றத் தொடங்கினார்.

கட்சித் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தனது ஆதரவாளர்களை திரட்டி மாலையணிவித்து மரியாதை செலுத்துவது, நலத்திட்ட உதவிகளை வழங்குவது உள்ளிட்ட கட்சிப் பணிகளில் தீவிரமாக செயலாற்றி வருகிறார். ஆனால் இவர் பெண் என்பதாலும், தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பான்மையாக நாடார் சமூகத்தினர் இருப்பதால், அந்த சமூகத்தை சேர்ந்தவர்களையே கட்சி மாவட்ட செயலாளர்களாக அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் நியமித்துள்ளதாலும், தவெக விலும் நாடார் சமூகத்தை சேர்ந்த ஒருவரையே மாவட்ட செயலாளராக நியமிக்க வேண்டும் என்று தவெக வின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், விஜய்க்கு யோசனை கூறியுள்ளார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு தவெக விற்கு செயலாளராக யாரையும் நியமிக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.

இதற்கிடையே நாடார் சமூகத்தைச் சேர்ந்த எஸ்சிஆர் சாமுவேல்ராஜ், ஜேகேஆர் உள்ளிட்ட பிரபலங்கள் தவெக வின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு வர விரும்புகின்றனர். அவர்களும் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள்களில் தவெக சார்பில் மாலையணிவிப்பு, அன்னதானம் என நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதனால் ஒரு தேர்தலை சந்திப்பதற்கு முன்பே தவெக வில் கடும் கோஷ்டி பூசல் நிலவுகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி தவெக மாவட்ட செயலாளர் உள்பட 8 மாவட்ட பொறுப்பிற்கு நியமனம் செய்ய இன்று விஜய் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தெரிந்ததும், அஜிதா ஆர்க்னஸ், தனது ஆதரவாளர்களுடன் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு இன்று காலை வந்துள்ளார். ஆனால் அவரை அலுவலகத்திற்குள் செல்ல செக்யூரிட்டிகள் அனுமதிக்கவில்லை.

இதனால் விஜய்யின் பனையூர் அலுவலகத்தை அஜிதா ஆர்க்னஸ் தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார். இதனால் அவர்களுக்கும், பாதுகாப்பு பணியில் இருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. செக்யூரிட்டிகள் தடுத்ததால், கட்சி அலுவலகம் முன்பு கதறி அழுதார். இதைப் பார்த்ததும் அவரது ஆதரவாளர்கள் கொதிப்படைந்தனர். கோஷங்களை எழுப்பியதால் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags : Vijay ,Banaiur ,Chennai ,Ajita Argnus ,Taweka Win ,Thoothukudi ,
× RELATED சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் சசிகலா திடீர் ஆலோசனை