×

செங்குன்றம் அருகே ஏரிகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றவேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

புழல், மே 10: செங்குன்றம் அருகே ஏரிகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி, தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சியில் பாடியநல்லூர் ஏரி, சோத்துப்பாக்கம் ஏரி மற்றும் ஹாங்காடு ஊராட்சியில் பன்னீர்வாக்கம் ஏரி உள்ளன. இந்த ஏரிகளில் உரிய பராமரிப்பு இல்லாததால் தற்போது, 3 ஏரிகளில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. ஏரிக்கரையை சுற்றிலும், செடிகொடிகள் முளைத்து புதர்மண்டிக்கிடக்கிறது.

மேலும், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் லாரிகள் மூலமாக கொண்டுவந்து ஏரிகளில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இதனால், ஏரியில் உள்ள தண்ணீர் கடும் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் அவல நிலையில் உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. ஏரிகளில் தேங்கியுள்ள நீரைக் குடிக்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.

பாடியநல்லூர், பன்னீர்வாக்கம் ஏரிகளை தனியார் நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் ஏரிகள் தற்போது குளம், குட்டையாக மாறி வருகிறது. எனவே, நீர்வளத்துறை மற்றும் வருவாய் துறையினர் ஏரிகளில் உரிய ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியார் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வேண்டும், புதிதாக ஏரியில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

மேலும், சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, ஏரிகளில் வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றி பராமரிக்கவும், வாகனங்களில் இருந்து கழிவுநீர் கொண்டு வந்து ஏரிகளில் விடுபவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, பாடியநல்லூர், சோத்துப்பாக்கம் பகுதிமக்கள் கூறுகையில், பாடியநல்லூர், சோத்துப்பாக்கம் ஏரிகளில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடி கொடிகளை அகற்றி, ஏரிகளை தூர்வாரி பராமரித்து வந்தால் பாடியநல்லூர், கும்மனூர், சோத்துப்பாக்கம், செங்குன்றம், தீர்த்தங்கரையும்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

மேலும், ஏரியை சுத்தப்படுத்தினால் இதிலுள்ள தண்ணீரை குடிநீராக பயன்படுத்தலாம். ஏரி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்களை அகற்றி, பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் வரும் காலங்களில் ஏரிகள் இருந்த இடம் தெரியாமல் போகும் அளவுக்கு ஆக்கிரமிப்புகள் செய்யப்படும். எனவே, 3 ஏரிகளையும் சீரமைத்து பாதுகாக்க நீர்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

The post செங்குன்றம் அருகே ஏரிகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றவேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chengunram ,Puzhal ,Padiyanallur lake ,Padiyanallur panchayat ,Sothupakkam lake ,Panneervakkam ,Hangadu ,Dinakaran ,
× RELATED திருநின்றவூர் நகராட்சியில் காலி...