×

போர் பதற்றம் எதிரொலி: CA தேர்வு மற்றும் பஞ்சாப்பில் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!!

டெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து வரலாறு காணாத தாக்குதல் தொடர்வதால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் தீவிர தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக இந்தியாவும் நேரடி தாக்குதலை தொடர்ந்ததால் உச்சகட்ட பதற்றம் உருவாகி உள்ளது. இரு நாடுகளும் எல்லை பகுதிகளில் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இருநாடுகளும் முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், போர் பதற்றம் நிலவி வருவதால் பட்டய கணக்காளருக்கான சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் இன்று முதல் வருகிற 14ம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டயக் கணக்காளர் கழகம் அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்வுகளுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல, பாகிஸ்தானுடன் 532 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பஞ்சாப்பில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடவும், தேர்வுகளை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை, புதிய தொடக்க தேதிக்கு குறைந்தது ஐந்து நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post போர் பதற்றம் எதிரொலி: CA தேர்வு மற்றும் பஞ்சாப்பில் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Tags : CA ,Punjab ,Delhi ,India ,Pakistan ,Operation Shintour ,Kashmir ,Rajasthan ,Dinakaran ,
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...