×

சட்டம்-ஒழுங்கை சீரழித்த எடப்பாடி திராவிட மாடல் ஆட்சியை குற்றம் சொல்ல அருகதை இல்லை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கு

சென்னை: சட்டம் -ஒழுங்கை சீரழித்து ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு, திராவிட மாடல் ஆட்சியைக் குற்றம் சொல்வதற்கு அருகதை இல்லை என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்ட அறிக்கை: மக்கள் நலத் திட்டங்கள் மூலம் திராவிட மாடல் அரசு பெண்களிடம் பெற்றிருக்கும் அபரிமிதமான செல்வாக்கை கண்டு என்ன செய்வதென்று தெரியாமல், விழி பிதுங்கி, தனது டெல்லி எஜமானர்களின் வழியில் பொய்களையும் அவதூறுகளையும் அள்ளிக் கொண்டுவந்து அரசியல் செய்யப் பார்க்கிறார் பழனிசாமி.

பழனிசாமி ஆட்சியில் 2019-20 ஆண்டில் 3.25 விழுக்காடு என அதல பாதாளத்தில் விழுந்து கிடந்த தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2024-25ம் ஆண்டில் 9.69 விழுக்காடாக உயர்த்தி இந்தியாவிலேயே நம்பர்-1 மாநிலமாக உயர்த்தியுள்ளார். இந்த திராவிட மாடல் ஆட்சியைப் பார்த்துக் குற்றம் சொல்வதற்குக் கேடுகெட்ட ஆட்சி நடத்திய பழனிசாமிக்கு அருகதை இல்லை. கடந்த 4 ஆண்டுக்கால திமுக ஆட்சியில் தொடர்ந்து தமிழ்நாட்டில் குற்ற நடவடிக்கைகள் குறைந்து வருகின்றன.

கடந்த 12 ஆண்டுகளில் 2024ம் ஆண்டில்தான் கொலை சம்பவங்கள் குறைவாக நடந்திருக்கின்றன. கொலை குற்ற விகிதம் ஒரு லட்சம் மக்களுக்கு தேசிய சராசரி 2.2 என்றால், தமிழ்நாட்டில் அது 1.1 ஆக குறைந்திருக்கிறது.
அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை விட மிகத் தீவிரமான நடவடிக்கைகள் திமுக ஆட்சியில்தான் உறுதியாகவும் விரைவாகவும் எடுக்கப்படுகின்றன. அதிமுக ஆட்சியில் அதிகபட்சமாக தடுப்பு காவலில் வைக்கப்பட்ட ரவுடிகள் 1,929 பேர் என்றால், திமுக ஆட்சியில் கடந்த ஆண்டில் அதிகபட்சமாக 3,645 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஏ மற்றும் ஏ+ ரவுடிகளின் எண்ணிக்கை 50 விழுக்காடாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

நான்காண்டு கால திராவிட மாடல் ஆட்சி மக்களிடம் பெற்றிருக்கும் அபரிமிதமான செல்வாக்கை கண்டு பொறுக்காமல் பிதற்றும் பழனிசாமியின் கபட நாடகங்கள் மக்களிடம் ஒருநாளும் வெற்றிப் பெறாது. சரித்திரம் போற்றும் சாதனைகளை தந்துள்ள நான்காண்டு திராவிட மாடல் ஆட்சியே மீண்டும் தொடரப் போகிறது என்ற உண்மையை ஏற்க முடியாமல் அவதூறுகளை அள்ளி வீசி வரும் பழனிசாமியின் முகத்தில் தமிழ்நாட்டு மக்கள் தேர்தலில் தோற்கடித்து கரியைப் பூசப் போவது உறுதி.

 

The post சட்டம்-ஒழுங்கை சீரழித்த எடப்பாடி திராவிட மாடல் ஆட்சியை குற்றம் சொல்ல அருகதை இல்லை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கு appeared first on Dinakaran.

Tags : Edappadi ,DMK Organization ,R.S. Bharathi ,Chennai ,Palaniswami ,Dinakaran ,
× RELATED பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தலா 22,291...