மேல்மலையனூர், மே 8: விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த திடீர் கன மழையால் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் நீரில் மூழ்கின. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெப்பம் நிலவியதால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்திருந்தனர். இந்நிலையில் மேல்மலையனூர் தாலுகா மேலச்சேரி, செவலபுரை, வடபாலை, தாதிகுளம் ஈயகுணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது.
ஆனால், மேல்மலையனூர் சுற்றுவட்டார கிராம பகுதியில் தாளடி பருவ நெல்மணிகள் தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ள நிலையில் சில விவசாயிகள் நெல் அறுவடை செய்து வரும் சூழலில் நேற்று முன்தினம் இரவு பெய்த திடீர் கனமழையால் விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நெற்கதிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். தற்போது மழைநீரில் மூழ்கியுள்ள நெற்கதிர்களை அறுவடை செய்ய அறுவடை இயந்திரம் வாடகை மணிக்கு ரூ.3,500 கேட்கப்படுவதால் விவசாயிகள அறுவடை செய்ய அதிகளவு செலவு செய்ய வேண்டியுள்ளது.
இதனால் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். மேலும் நீரில் மூழ்கியதால் மகசூல் குறையும் என்றும், நெல்லின் தரம் குறைந்து தகுந்த விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படும் என்றும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீரில் மூழ்கிய நெல் மணிகளை அறுவடை செய்து காயவைக்கும் பணியில் சில விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே, தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post விழுப்புரம் மாவட்டத்தில் திடீர் கனமழையால் நீரில் மூழ்கிய நெற்கதிர்கள் appeared first on Dinakaran.
