×

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது

சென்னை: பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது. சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கியது. தமிழகம் புதுச்சேரியில் 7518 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர் மற்றும் தனித் தேர்வர்கள் என 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ மாணவியர் இந்த தேர்வில் பங்கேற்க பதிவு செய்திருந்தனர். மேற்கண்டவர்களில் 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பேர் மாணவியர். சிறைவாசிகள்145 பேர் எழுதினர். மார்ச் 25ம் தேதி தேர்வு முடிந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. அதன்படி தமிழகத்தில் சுமார் 80 மையங்கள் அமைக்கப்பட்டு 40 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மூலம் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியது. முன்னதாக, மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கும் பிளஸ் 2, பிளஸ்1, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் முடிவுகள் மே 9, 19ம் தேதிகளில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது.

அதன்படி, தற்போது பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிக்கப்பட்டு, சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள டேட்டா மையத்தில் மதிப்பெண் பட்டியல்கள், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பட்டியல்கள் தயாரிக்கும் பணி நடக்கிறது. இதையடுத்து இன்று காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார். சென்னை கோட்டூர்புரம் அண்ணாநூற்றாண்டு நூலகத்தில், வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள வசதியாக http://resultsdigilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணைய தளங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மாணவ மாணவியர் இந்த இணைய தளங்களில் தங்களின் பதிவு எண்கள் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களை பொருத்தவரையில் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிட்டு செல்போன் எண்ணுக்கும், தனித் தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணபிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.

 

The post பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,School Education Minister ,Anbil Mahesh Poiyamozhi ,Anna Centenary Library ,Kotturpuram, Chennai ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது