- மதுரை சித்திரை விழா
- அம்மன்
- மதுரை
- மீனாட்சி-சுந்தரேசுவரர் திருகல்யாணம்
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்ராய் திருவிழா
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் 9ம் நாளான இன்று அம்மனின் திக்கு விஜயம் நடக்கிறது. நாளை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுவதையொட்டி 60 ஆயிரம் பேருக்கு விருந்து பரிமாறப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29ல் தொடங்கி நடந்து வருகிறது. 8ம் நாளான நேற்று காலை ஊடல் லீலையும் இரவு 7.35 மணிக்கு அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும் நடந்தது. அப்போது அம்மனுக்கு கிரீடம் சாற்றி, செங்கோல் வழங்கப்பட்டது. இதன்பின்னர், அம்மனிடம் இருந்து செங்கோலை பெற்று, தக்கார் ருக்மணி பழனி வேல்ராஜனிடம் சிவாச்சாரியார்கள் வழங்கினர். அவர் சுவாமி சந்நிதியில் 2ம் பிரகாரத்தை சுற்றிவந்து, மீண்டும் அம்மனிடம் செங்கோலை சமர்ப்பித்தார்.
இதையடுத்து மாசி வீதிகளில் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மன் மற்றும் பிரியாவிடையுடன் சுவாமி வீதி உலா வந்தனர். சித்திரை முதல் ஆவணி வரை 4 மாதங்கள் மதுரையில் மீனாட்சி அம்மனின் ஆட்சி நடைபெறும் என்பது ஐதீகம். 9ம் நாளான இன்று திக்கு விஜயம் நடக்கிறது. மீனாட்சி அம்மன் தடாதகைப் பிராட்டியாக மதுரையில் அவதரித்து ஆட்சி புரிகையில் மேற்கொண்ட திக்விஜய புராணத்தை குறிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி அம்மன் அஷ்ட திக்கு பாலர்களை எதிர்த்து வெற்றி பெற்ற லீலை நடக்கிறது. பிறகு, வடக்கு மாசி-கிழக்கு மாசி வீதி சந்திப்பு லாலா ரெங்கசத்திரம் திருக்கண் மண்டபத்தில் அம்மன் இந்திர விமானத்தில் எழுந்தருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நாளை காலை மீனாட்சி-சொக்கர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் இன்று மாலை 5 மணியளவில் பல்லக்கில் மதுரைக்கு புறப்படுகின்றனர். இரவு 7 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை வந்தடைகின்றனர். பின்னர், நாளை காலை நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
60 ஆயிரம் பேருக்கு விருந்து;
திருக்கல்யாணத்தையொட்டி, மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் 12 ஆயிரம் சதுரடி பந்தலில் நாளை காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுமார் 60 ஆயிரம் பக்தர்களுக்கு விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கல்கண்டு சாதம், சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், வடை, சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், உருளை கிழங்கு பொறியல், பச்சடி, ஊறுகாய் வழங்கப்படுகிறது. இதற்காக காய்கறிகள் வெட்டும் பணி, விருந்து தயாரிப்பு பணி தொடங்கியுள்ளது.
The post மதுரை சித்திரை திருவிழாவில் அம்மன் இன்று திக்கு விஜயம்: நாளை திருக்கல்யாணம் 60 ஆயிரம் பேருக்கு விருந்து appeared first on Dinakaran.
