- பாக்கிஸ்தான்
- ஐநா பாதுகாப்பு கவுன்சில்
- இந்தியா
- சீனா
- நியூயார்க்
- ஐ.நா.
- பாதுகாப்பு கவுன்சில்
- பஹல்காம் தாக்குதல்
- ஜம்மு மற்றும்
- காஷ்மீர்

நியூயார்க்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானிடம் உலக நாடுகள் சரமாரி கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப். 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டதால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த பதற்றங்களுக்கு மத்தியில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா, சீனா மற்றும் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மூடிய அறையில் நடந்தது. மொத்தம் 15 நாடுகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்திற்கு, ஐக்கிய நாடுகள் சபைக்கான கிரீஸ் நாட்டின் நிரந்தர பிரதிநிதியும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் மே மாதத்திற்கான தலைவருமான தூதர் எவாஞ்சலோஸ் செகெரிஸ் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் நடந்த விபரங்கள் குறித்து பாதுகாப்பு கவுன்சில் எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை. ஆனால் கூட்டத்தில் பாகிஸ்தானின் ஐ.நா. பிரதிநிதி அசிம் இப்திகார் அகமது, இந்தியாவின் சிந்து நதிநீர் ஒப்பந்த நிறுத்தத்தை போருக்கு சமமான செயல் எனக் கண்டித்தார். மேலும், பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானிற்கு தொடர்பு இல்லை எனவும், காஷ்மீர் பிரச்னையை திசைதிருப்ப இந்தியா இதுபோன்ற செயல்களை செய்வதாக குற்றம் சாட்டினார்.
அப்போது இந்தியாவின் ஐ.நா. துணை செயலாளர் யோஜனா பட்டேல், பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுத்தார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து ஆகியவை இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டை ஆதரித்தன. மேலும் அனைத்து நாடுகளும் பஹல்காம் தாக்குதல் குறித்து பாகிஸ்தானிடம் சரமாரி கேள்வி எழுப்பின. லஷ்கர் இ தொய்பா தொடர்பு உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியதுடன், பாகிஸ்தானின் ஏவுகணை சோதனைகளுக்கும் கண்டனம் தெரிவித்தன. தாக்குதலுக்கு பொறுப்பு கூறல் அவசியம் என்று எச்சரித்தன.
அதேநேரம் நிரந்தர உறுப்பினரான சீனா, பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. தற்போதைய பாதுகாப்பு கவுன்சிலின் தலைமையை வகிக்கும் கிரீஸ், பஹல்காம் தாக்குதலை கடுமையாக கண்டித்து, தீவிரவாதத்தை எந்த வடிவத்திலும் ஏற்க முடியாது என தெரிவித்தது. மேலும் இரு நாடுகளையும் பதற்றத்தை தணிக்க அழைப்பு விடுத்தது. கூட்டத்தின் முடிவில், எந்தவிதமான தீர்மானமோ, நடவடிக்கையும் இல்லாமல் முடிவடைந்தது. சீனாவை தவிர பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களில் நான்கு நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்ததால், பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் பலவீனமடைந்தன. இது இந்தியாவின் ராஜதந்திர வெற்றியாக பார்க்கப்படுகிறது.
The post ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானிடம் சரமாரி கேள்வி: இந்தியாவுக்கு 4 வீட்டோ நாடுகள் ஆதரவு, பாகிஸ்தானுக்கு சீனா மட்டும் ஆதரவு appeared first on Dinakaran.
