புளோரிடா: முன்னாள் மனைவி ரகசியமாக மறுமணம் செய்துகொண்ட தகவல் வெளியான நிலையில், பிரபல வீரர் டாம் பிராடி வெளியிட்டுள்ள குழப்பமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் பிரபல கால்பந்து ஜாம்பவான் டாம் பிராடியின் முன்னாள் மனைவியும், புகழ்பெற்ற மாடல் அழகியுமான ஜிசல் புண்ட்சென், தனது நீண்ட நாள் நண்பரான ஜோகியம் வேலன்டே என்பவரை ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களது திருமணம் கடந்த 3ம் தேதி புளோரிடா மாகாணத்தில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளது. இந்தத் தம்பதிக்கு ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம் குழந்தை பிறந்த நிலையில், தற்போது அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இந்தத் தகவல் தாமதமாக வெளிவந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தனது முன்னாள் மனைவியின் திருமணச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து டாம் பிராடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. அவர் ‘என்றும் இளமை’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்து செல்பி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, அந்தப் பதிவின் பின்னணியில் மனச்சோர்வு மற்றும் தற்கொலைத் தடுப்பு தொடர்பான சோகமான பாடல் ஒன்றை அவர் இணைத்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்தப் பாடலில் வரும் ‘நான் உயிருடன் இருக்க விரும்பவில்லை’ என்ற வரிகள் அவர் மனவேதனையில் இருப்பதை உணர்த்துவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், அவர் தனது குழந்தைகளின் புகைப்படத்தையும் பகிர்ந்து, தான் ஒரு தந்தையாகக் குழந்தைகளுடன் இருப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருவதையும் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.
