×

ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் ஸ்டார் அகாடமி வாலிபால் பயிற்சி

*கலெக்டர், எம்எல்ஏ துவக்கி வைத்தனர்

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் ஸ்டார் அகாடமி வாலிபால் பயிற்சியை மாவட்ட கலெக்டர், எம்எல்ஏ நேற்று மாலை துவக்கி வைத்தனர்.
ஜோலார்பேட்டையில் உள்ள அரசு சிறு விளையாட்டு மைதானத்தில், எஸ்டிஏடி (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்) ஸ்டார் அகாடமி‌ வாலிபால் பயிற்சி மையம் சார்பில், வாலிபால் பயிற்சி துவக்க விழா நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிவசவுந்திரவல்லி தலைமை தாங்கினார்.

திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க.தேவராஜி முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி வரவேற்றார். இந்த பயிற்சியில் 20 மாணவர்கள் மற்றும் 20 மாணவிகள் என மொத்தம் 40 பேர் பங்கேற்றனர்.

இதில் கலெக்டர் சிவசவுந்திரவல்லி, தேவராஜி எம்எல்ஏ ஆகியோர் ஸ்டார் அகாடமியை துவக்கி வைத்தனர். அப்போது எம்எல்ஏ தேவராஜி பேசுகையில், ‘விளையாட்டு துறை அமைச்சரான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நீங்கள் பல்வேறு சாதனைகள் படைத்து வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்’ என்றார்.

தொடர்ந்து கலெக்டர் சிவசவுந்திரவல்லி பேசுகையில், ‘கல்வியுடன் உடற்பயிற்சி என்பது முக்கியமான ஒன்றாகும். விளையாட்டுப் பிரிவில் சாதிப்பவர்களுக்கு அரசு துறையில் வேலைவாய்ப்பு உண்டு. விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் உடலை பலப்படுத்தும் நாம் ஆரோக்கியத்துடன் இருக்கவும் வழிவகை செய்யும்’ என்றார்.

நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் எம்.காவியா விக்டர், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் பெரியார் தாசன், பயிற்சியாளர் கார்த்திக், உடற்கல்வி ஆசிரியர் ஏசுராஜ் உள்ளிட்ட துறை அலுவலர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விளையாட்டு அரங்க பொறுப்பாளர் அன்பரசன் நன்றி கூறினார்.

இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு, அத்துடன் விளையாட்டு சீருடைகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சிற்றுண்டியும் வழங்கப்படும். இந்த பயிற்சியானது தினமும் காலை 6.30 முதல் 8.30 வரையிலும், மாலை 4.30 முதல் 6.30 வரையிலும் நடக்கும். பயிற்சி பெற்ற பிறகு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் தேசிய போட்டிகளில் பங்கேற்க அரசு சார்பில் வீரர், வீராங்கனைகள் அழைத்து செல்லப்படுவார்கள்.

The post ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் ஸ்டார் அகாடமி வாலிபால் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : STAR ACADEMY VOLLEYBALL ,ZOLARBET MINI-SPORTS ARENA ,MLA ,Jolarbet ,Star Academy ,Small Sports Arena District ,Government Small Playground ,Jolarbata ,STAD ,Tamil Nadu ,Sports ,Jolarbet Mini Stadium ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...